Skip to main content

சிட்டுக்குருவிகள்!
            கண்ணையன் தாத்தாவின் குளிர்ந்த உடல் ஓலைகளால் வேயப்பட்டிருந்த அவர் வீட்டின் முன் திண்ணையில் கிடத்தப்பட்டிருந்தது. மொய்பதை போல அவர் வீட்டை அந்த ஊர் மக்கள் மொய்த்துக்கொண்டிருந்தனர் . ஊரில் எங்கு சாவு விழுந்தாலும் ஒன்றி கூடி ஒப்பாரி வைக்கும் கிழவிகள் ஒரு பக்கம் தங்கள்  மாரிலடித்துக்கொண்டு  மண்ணில் புரண்டு அலறிக்கொண்டிருன்தனர்.. சின்னஞ்சிறார்கள் மிரட்சியோடு அசைவின்றி திறந்திருந்த கண்ணையன் தாத்தாவின் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த கண்ணில் நீர் ஊறி வழிந்தபடியிருந்தது. இன்னும் சிறுது நேரத்தில் எல்லாமும் முடிந்துவிடும் கடும் மழை பெய்து ஓய்வதை போல.  கூடியிருக்கும் கூட்டத்திலிருந்து யாரோ நான்கு பேர் கைத்தாங்கலாக மரக்கட்டை போன்ற அந்த உடலை ஊருக்கு வெகு தூரம் தூக்கிச்சென்றி புதைக்கவோ , எறிக்கவோ போகிறார்கள். கண்ணையன் தாத்தாவின் 62 வருட ஆட்டமும் மண்ணுக்கடியில் மறைய போகிறது.

           கண்ணையன் தாத்தா தன் கடைசி காலத்தில் யாரிடமும் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் அந்த ஓலை குடிசையின் உள்ளேயே வாழ்ந்து வந்தார். அந்த இருட்டு உலகில் அவர் மட்டும் தனித்து உலவிக்கொண்டிருந்தார். தானாக பேச வருபவர்களிடமும் பிடிக் கொடுக்காமல் ஒதுங்கியே இருந்தார். மனித வாடையின் மீது வெறுப்பு கொண்டவராக மனித முகங்களின் நிழல்களை கூட பார்க்க கூசினார். அவருக்கு உணவு கொண்டுசெல்லும் கடைக்கார பொடியன் மட்டும் தான் தாத்தாவின் முகத்தை கடைசி காலத்தில் முழுமையாக பார்த்தவன். அவரின் தீண்டா தனிமைக்கு  தான் இந்த உலகைவிட பெரியதாக நினைத்த அவரின் துணைவி பாக்கியம் சில ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்தது தான் காரணம். கடைக்கார பொடியன் பாக்கியம் பாட்டியிடம் மிகுந்த பிரியத்தோடு பழகி வந்ததால் அவனுடன் மட்டும் முகம் கொடுத்து பேசி வந்தார். அவனும் தாத்தாவின் தட்சணையாக கை நீட்டி எதுவும் வாங்கியதில்லை. அவன் அவர்களை தன் சொந்த தாத்தா பாட்டியாகவே பார்த்து வந்தான்.  கண்ணையன் தாத்தாவும் பாக்கியம் பாட்டியும் கடவுளின் குழந்தைகள். அவர்களென்று யாரும் இல்லை, அவர்களுக்கும் யாரும் பிறக்கவில்லை.     

                             கண்ணையன்  தன்சிறு  வயதில் ஒரு டூரிங் டாக்கீஸில் தட்டு முறுக்கு விற்றுக்கொண்டு கிடைக்கும் வருமானத்தில் தன் வயிற்றை கழுவிக்கொண்டிருந்தார். பாக்கியம்  அதே டூரிங் டாக்கீஸ் வாசலில் இருந்த ஒரு இட்லி கடையில் தட்டு கழுவும் வேலை செய்துக்கொண்டிருந்தார்.   கண்ணையனும் பாக்கியமும் அந்த சிறுவயதிலேயே வாழ்க்கையை நன்கு புரிந்துக் கொண்டவரகள். இருவரும் அவ்வப்போது டாக்கீஸின் பின்னால் இருந்த ஒரு மணல் மேட்டில் அமர்ந்து பல கதைகளை பேசி மகிழ்வார்கள். அவர்களுக்கு அப்போது தெரிந்ததெல்லாம் டூரிங் டாக்கீஸும் , இட்லி கடையும் , அந்த மணல் மேடும் தான். என்றாவது ஒரு நாள் அந்த மணல் மேட்டை கடந்து காற்றோடு காற்றாக இழைந்து பறக்க வேண்டும் என்று இருவரும் கனவு கண்டுக்கொண்டிருப்பார்கள்.

                          வயது ஏற ஏற அவர்களுக்கு வாழ்வின் நிஜம் புரிய துவங்கியது. அதுவரை பாக்கியத்தை சின்ன பெண்ணாக பார்த்தவர்கள் இப்போது அவளின் இளமை காரணமாகபிணம் திண்ணி கழுகை போல வட்டமடிக்க துவங்கிவிட்டனர். பார்வையாலயே பசியாற்றிக்கொள்ளும் அந்த மரியாதைக்குரியவர்களை எதிர்த்து பாக்கியத்தால் என்ன செய்ய முடியும் இரையாவதை விட. பாவம் கண்ணையனும் தன் பாக்கியத்தின் நிலை எண்ணி உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்

                        ஒரு நாள் மாலை வேலையில் அந்த மணல் மேட்டில் இருவரும் அமர்ந்து தங்களின் எதிர்காலம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வானம் பொத்துக்கொண்டு மழையை சிந்தியது. மழையின் சாரல் கண்ணையனின் முகத்தில் அடித்தவுடன் அவனுக்குள் ஒரு புது உற்சாகம் பிறந்தது. பாக்கியத்தின் கையை இறுக பற்றிக்கொண்டு வேகமாக ஓடத் துவங்கினான். அவளும் அவன் பின்னாலயே வேகமாக ஓடினாள். இருவரும் அந்த இட்லி கடையை கடந்து , டூரிங் டாக்கீஸை கடந்து , மணல் மேட்டையும் கடந்து நீண்ட தூரம் ஓடிக்கொண்டே இருந்தார்கள். மழை ஓய்ந்தது.

                            ஏறக்குறைய கண்ணையனும் பாக்கியமும் எல்லா ஊர்களிலும் சுற்றி  இருப்பார்கள். எங்கும் அவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. அவர்களுக்கு தேவையெல்லாம் ஒரு குடையின் நிழல் மட்டும் தான் , ஆனால் அது கூட கிடைக்காமல் பாவம் அவர்களை இந்த சமூகம் துரத்திக்கொண்டே இருந்தது. ஒரு வழியாக அவர்களின் ஆயூள் பாதியை கடந்த பின் தான் அவர்கள் தேடியது அவர்களுக்கு கிடைத்தது. மலை அடிவாரத்தில் காற்றின் மணமும் செடி கொடிகளின் இரைச்சலும் , சின்ன சின்ன விலங்கினங்களின் வாழ்விடமாகவும் இருந்த அந்த ஊரில் அவர்களுக்கென்று ஒரு இடம் ,ஒரு மடி கிடைத்தது.  

                              இனி எல்லாம் நலமே என்று நினைத்து மகிழ்ச்சியாக வாழ துவங்கினார்கள் இந்த தம்பதியினர். வாழ்வில் இத்தனை காலம் ஓடிய ஓட்டம் ஒரு வழியாக நின்றுவிட்டது என்று அகம் மகிழ்ந்தார்கள். தங்களுக்கென்று அந்த ஊரில் ஒரு சின்ன குடிசை கட்டிக்கொண்டார்கள். பல செடிகளை தங்கள் வீட்டை சுற்றி நட்டுக்கொண்டார்கள். இரவில் தினமும் அந்த திண்ணையில் அமர்ந்து நிலாவை ரசித்துக்கொண்டிருப்பார்கள். தங்கள் வாழ்வில் நிலா இவ்வளவு அழகாக இதுவரை தெரிந்ததில்லை. கண்ணையன் அதே ஊரில் ஒரு வேலையும் தேடிக்கொண்டார். மாதாமாதம் சம்பளம் என்பதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். இதுவரை கண்ணையன் தன் வாழ் நாளில் மாத சம்பளம் எல்லாம் வாங்கியது கிடையாது. தின கூலிகள் தான். பாக்கியத்திற்கு தன் கணவன் மட்டும் தான் உலகம். சிறு வயது முதல் அவள் பட்ட அவமானங்கள் அவளை ஊராருடன் பழக விடாமல் தடுத்துவிட்டது. ஆனால் என்ன இதோ கண்ணையன் இருக்கிறாரே , அவரை விட உலகில் உயர்ந்தது இருக்கிறதா என்ன? ஒருவேளை இந்தனை ஆண்டு காலத்தில் என்றாவது ஒரு நாள் கண்ணையனுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்திருந்தால்? நினைக்கையில் பாக்கியத்திற்கு நெஞ்சே வெடிப்பதை போல இருந்தது.

               அவர்களின் வாழ்க்கை மிகவும் அழகாக மாறிக்கொண்டிருந்த தருணத்தில் தான் பாக்கியம் திடீரென்று உடல் நிலை முடியாமல் இறந்து போனாள். இந்த திடீர் இழப்பை கண்ணையனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உலகமே ஒரு நொடி இருண்டதைபோல இருந்தது அவருக்கு. பாக்கியத்தின் உடலை எங்கோ கொண்டு சென்று எறிக்கவே , தொலைவில் கொண்டு சென்று புதைக்கவோ அவருக்கு மனமில்லை , அதனால் தன் குடிசையின் திண்ணையை தோண்டி அதிலேயே  பாக்கியத்தை புதைத்து வைத்தார். பாக்கியம் தன்னோடு இல்லை என்பதை அவரால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. பாக்கியத்தை பற்றிய நினைவு வரும்போதெல்லாம் அந்த திண்ணையில் அமர்ந்து அவளோடு பேசுவதாக நினைத்து தனக்கு தானே பேசிக்கொண்டிருப்பார். இரவில் நிலாவை ரசிப்பார் , செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார் பாக்கியத்தையும் சேர்த்துக்கொண்டு. இப்படியாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தை வெறுக்க துவங்கினார். இருளின் சுவையும் , தனிமையின் நிரையும் அவருக்கு பழகிபோய்விட்டது. யாராவது ஒருவர் " வீட்ல தனியா என்னய்யா பண்ற " என்றாள் , " பாக்கியத்தோட பேசிக்கிட்டு இருக்கேன் " என்பார். இது எதுவும் ஊர்காரர்களுக்கு தெரியாமல் இல்லை ஆனாலும் அவரின் நிலை உணர்ந்து அவரை அப்படியே விட்டுவிட்டார்கள்.

               இதோ இன்று எல்லாம் முடிந்துவிட்டது. கண்ணையன் தாத்தாவின் உடலை யாரோ தூக்குகிறார்கள். ஊர் கலைய துவங்குகிறது. செடிக்கொடிகள் இலைகளை உதிர்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தொலைவில் மறைந்துக்கொண்டிருக்கும் கண்ணையனின் சடலத்தை அவர் வீட்டின் திண்ணை மட்டும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெயில்நதி இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதை 

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…