Skip to main content

மங்காத்தா - சூதாட்டம்!அண்மையில் JASON STATHAM நடித்த CHAOS எனும் ஆங்கில திரைப்படத்தை பார்த்தேன். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு சுழலும் சஸ்பென்ஸ் -   கிரைம் வகையை சேர்ந்த படம். படத்தின் ஆரம்ப காட்சியில் கடத்தல்காரனிடம் சிக்கிக்கொண்ட பெண் ஒருவரை காப்பாற்ற செல்லும் இரு போலீஸ்காரர்கள், வேண்டுமென்றே அந்த பெண்ணையும், கடத்தல்காரனையும் சுட்டு கொலை செய்துவிடுகின்றனர். அதனால் மேலிடம் அவர்களை பணியிடை நீக்கம் செய்துவிடுகின்றது. சில தினங்களுக்கு பிறகு, வங்கியில் நடைபெறும் கொள்ளை சம்பவமொன்று அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்ப காட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட இருவரில் ஒருவனும் (ஜேசன்), புதிதாக பணியமர்த்தப்பட்ட மற்றொரு இளைஞனும் சேர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில் இறங்குகிறார்கள். பல திருப்பங்களுக்கும், சில படுகொலைகளுக்கும் பிறகு இறுதியில் துவக்கக் காட்சியில் பணியிடை நீக்கம் செய்யப்பட மற்றொரு காவலன்தான் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டான் என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து கொள்ளையர்களும், காவல்துறையினருக்கும் இடையிலான நீண்ட நெடிய போராட்டம் துவங்குகிறது. இறுதியில் கொள்ளையன் கொல்லப்படுகிறான். அதிர்ஷ்டவசமாக போலீஸ் சார்பில், ஜேசன் வெடிகுண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்துவிடுகிறான். அப்பாடா, ஒரு வழியாக படம் நிறைவடைந்தது என நாம் நிமிந்து உட்காரும் சமயத்தில் மற்றொரு முடிச்சு நம் முன்னால் விழுகிறது. ஜேசனுடன் இணைந்து பணியாற்றிய அந்த புதிய இளைஞன் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக அசை போடத்துவங்குகிறான். ஏதோ ஒன்று அவனுக்கு இடைஞ்சலாக படுகின்றது. சட்டென்று பழைய பைல்களை எல்லாம் புரட்டிப்பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தவனாக ஏர் போர்ட்டை நோக்கி விரைகிறான். அப்போது அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது. நடந்த சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் தான்தான் என்றும், இடையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று சொல்லி அழைப்பை துண்டிக்கும் அந்த மனிதன் வேறு யாருமல்ல, ஜேசனேதான். சுபம்.டோனி கிக்லியோ என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்கிய இப்படத்தை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இப்படம் வணிக ரீதியாக  மிக பெரிய தோல்வியை தழுவியது. ஆனால் இந்த CHAOS தான் 2011 ல் மங்காத்தாவாக தமிழில் நகலெடுக்கப்பட்டு நம் தலையில் மசாலா அறைத்தது. வங்கி கொள்ளைக்கு பதிலாக இங்கு கிரிக்கெட் சூதாட்டம், ஜேசனுக்கு பதிலாக அதே கேரக்டரில் அச்சு பிசகாமல் அர்ஜுன், ஆரம்ப காட்சியில் சஸ்பென்ட் செய்யப்பட்டு பின் மீண்டும் கொள்ளையனாக வருபவனின் கேரக்டரில் அஜீத், அதே விசாரணைகள், அதே முடிவு. அதே படம். ஆனால் ஒரிஜினலில் அஜீத் கேரக்டர் கொலை செய்யப்பட்டு, இறுதியில் அர்ஜுன் கதாப்பாத்திரம் மட்டும் தப்பி பிழைக்கும். அதை மட்டும் கொஞ்சம் மாறிவிட்டார்கள். மற்றபடி CHAOSக்கும் மங்க்காத்தாவுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. அஜீத்தின் முந்தைய படமான பில்லா - 2ம் இதேபோல ஸ்கேர்பேஸ் எனும் புகழ்பெற்ற படத்திலிருந்து நகலெடுக்கப்பட்டதே.  காப்பியடி கல்ச்சர் தமிழ் சினிமாவை செல் அரிப்பதை போல கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக்கொண்டிருக்கும் வேளையில், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்களும் அதற்கு இசைந்து போவதும், அல்லது காப்பி என்பதை உணராமல் சிக்கிக்கொள்வதும் வருத்தத்திற்குரிய விஷயமாகும். 

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…