Saturday, 13 April 2013

தியோடர் பாஸ்கரனின் " மீதி வெள்ளித்திரையில் "சூழலியல் ஆர்வலரும், திரைப்பட ஆய்வாளர்களில் முன்னோடியுமான தியோடர் பாஸ்கரனின் " மீதி வெள்ளித்திரையில் " எனும் தமிழ் சினிமா குறித்த கட்டுரை தொகுப்பை வாசித்தேன். திரைப்பட வரலாறு, சினிமா அழகியல், ஆளுமைகள் மற்றும் திரைப்படங்கள் என நான்கு பகுதிகளாக பிரிந்து தமிழ் சினிமாவை அணுகும இத்தொகுப்பில் மொத்தம் இருபது கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழ் சினிமா கடந்த வந்த பாதையையும், அதன் முன்னேற்றத்துக்கு தோள் கொடுத்த ஆளுமைகளை அறிமுகப்படுவதிலும் இந் நூலின் வாயிலாக தியோடர் பாஸ்கரன் தமிழ் சமூகத்துக்கு பெரும் சேவை செய்துள்ளார். திரைப்பட மாணவர்கள் அவசியம் நுகர வேண்டிய அற்புதமான புத்தகம் இது. அதேபோல அரசியலுக்கும், சினிமாவுக்குமான உறவின் துவக்கப்புள்ளியை தகுந்த சாட்சியங்களோடு எழுதியுள்ளார். திராவிட கழகங்களுக்கு முன்பே திரை நட்சத்திரங்களை அரசியலுக்கு இழுத்துவரும் செயலை காங்கிரஸ் துவங்கிவிட்டது என்றும்  காங்கிரஸ் மூலம் மேல்சபை உறுப்பினரான கே.பி.சுந்தராம்பாள்தான் இந்தியாவிலேயே அரசியல் அரங்கில் கால் பதித்த முதல் திரை நட்சத்திரம் என்றும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறார்.

பகுதி 1: திரைப்பட வரலாறு....

தமிழ் சினிமாவின் ஆரம்ப கால வரலாற்றை பேசும் இப்பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில் வெளிவந்த தேசபக்த படங்களை பற்றிய அறிமுகத்தையும், அப்போதைய அரசியல் பிரச்சனைகளால் சினிமாவின் போக்கு எப்படி நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டது என்பதையும் விளக்குகிறார். குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்டுவந்த திரைப்படத்துறை, அவர்கள் ஆட்சியிலிருந்து விலகியதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் அவர்களுக்கு பல்குத்திவிடும் ஊடகமாக செயல்பட்டதை கண்டிக்கிறார். ஆங்கிலேயே அதிகாரிகள் சினிமாவிற்கு விதித்த கட்டுப்பாடுகளால், இரண்டாம் உலகப்போரில் பிரித்தானிய படைகளை ஆதரித்து பல படங்கள் தயாரிக்கப்பட்டன, இது ஒரு மோசமான செயல், தேசபக்தி திரையில் விலைபோகும் பொருளாக அடையாளம் காணப்பட்டது என்றும் வருந்துகிறார்.

தமிழ் சினிமாக் குறித்து புழங்கும் தகவல்களில் பலவும் பொய்யானவை, அவைகளை சீரிய முறையில் ஆராய்ந்து தொகுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். தமிழின் முதல் சமூகப்படம் என அறியப்படும் மேனகாவுக்கு முன்பே கெளசல்யா, டம்பாச்சாரி முதலிய சமூகப்படங்கள் வெளிவந்துவிட்டன என்றும், பி.யூ.சின்னப்பாவின் " உத்தமபுத்திரன் " க்கு முன்பே துருவன் என்ற படத்தில் பி.எஸ்.சிவபாக்கியம் என்ற நடிகை இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் என்பதை ஆனந்த விகடனில் வெளியான விமர்சன கட்டுரையை கொண்டே விளக்குகிறார். நாடகத்திலிருந்து பிறந்ததாலேயே இந்திய சினிமாவில் மட்டும் இடைவேளை எனும் குறுக்கீடு இருப்பதாகவும், இதனால் படத்திற்கும், ரசிகர்களுக்குமான உறவு துண்டிக்கப்படுகிறது. இவை கலைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இன்றும் தமிழ் சினிமா அறிவு சார்ந்த துறையாக இல்லாமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே அணுகப்படுவதற்கு அன்றைய எழுத்தாளர்களும், பண்டிதர்களும் சினிமாவை புறக்கணித்ததே காரணம் என்றும் தெளிவுபடுத்துகிறார். " சினிமாவும் சூதாட்டம் போன்ற ஒரு தீமையான பொழுதுபோக்கே " எனும் காந்தியின் கருத்தை சுட்டிகாட்டி இந்நிலையை விளக்குகிறார்.

பகுதி - 2 : சினிமா அழகியல்
 
சினிமா அழகியல் எனும் இரண்டாம் பகுதியில் கர்நாடக இசை மேதைகளின் வருகையால் சினிமா ஒரு கலை வடிவமாக பண்டிதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அதன் பிற்பாடு எழுத்தாளர்களின் வருகை சினிமாவை மேலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றது என்று திட்டவட்டமாக சொல்கிறார். புதுமைபித்தன் சினிமாவுக்கும், நாடகத்துக்குமான வேறுபாட்டை முழுமையாக உணர்ந்திருந்தார் என்று அவரது மேதைமையை புகழ்கிறார். மக்கள் சினிமாவுக்கு வருவதை ஒரு சங்கீத கச்சேரிக்கு வருவதை போல உணர்ந்திருந்த காலகட்டத்தில் அத்தகைய எழுத்தாளர்களின் வருகை பாடல்களை குறைத்து வசனங்களை பிரதிநிதித்துவப்படுத்த முக்கிய காரணியாகும் என்கிறார். அதேபோல நாவல்களிலிருந்து திரைப்படங்களை உருவாக்கும் வித்தையை கே.ராம்நாத், மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் மிக சிறப்பாக கையாண்டனர் என்றும் இதில் கே.ராம்நாத் அதிகம் கவனிக்கப்படாமலேயே வாழ்ந்து மறைந்த மகத்தான கலைஞர் என்றும் வருந்துகிறார். விக்டர் ஹ்யூகோவின் லெஸ் மிஸரபல்ஸ் எனும் உலக புகழ் பெற்ற இலக்கிய படைப்பை தழுவி தமிழில் ஏழை படும் பாடு எனும் பெயரில் மிக சிறப்பாக கே.ராம்நாத் இயக்கி இருந்தார் என்றும் அவரது மேதைமையை வியக்கிறார். இலக்கிய வாசிப்பு உள்ள இளையவர்களின் வருகை தமிழ் சினிமாவை ராஜாக்கள் காலத்திலிருந்து மீட்டு மக்கள் கதைகளை திரையில் காட்ட வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  

ஆளுமைகள் எனும் மூன்றாம் பகுதியில் பாலு மகேந்திரா, ஸ்ரீதர், சுவாமிகண்ணு வின்சென்ட், நாகேஷ், கலைஞர் மற்றும் உலக திரைப்பட மேதையான அகிரா குரசோவா ஆகியோரின் வாழ்க்கையை சுருக்கி கொடுத்துள்ளார். அதேபோல நான்காம் பகுதியில் தமிழ் சினிமாவின் மாற்றத்துக்கு வழிகோலும் சிறப்பான படங்கள் அண்மையில் வெளிவர துவங்கியுள்ளன என்றும் இது இனி வரும் காலங்களில் நல்ல விளைவை கொடுக்கும் என்றும் நிறைவு செய்கிறார். தமிழ் சினிமாவை முழுமையாக ஒரு முறை சுற்றிவந்த உணர்வை கொடுக்கும் இக்கட்டுரைகள் தியோடர் பாஸ்கரன் அவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவையாகும். காலச்சுவடு அவற்றை முழுமையான ஒரே நூலாக தொகுத்துள்ளது. தமிழ் சினிமா ஆர்வலர்களும், சினிமா மாணவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. தமிழ் சினிமா குறித்த வியக்க வைக்கும் அரிய தகவல்களை கொடுக்கும் இந்நூல் மாற்று சினிமாவுக்கான சாத்திய கூறுகளையும், திரைப்பட விமர்சகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் முன் வைக்கிறது.    

மீதி வெள்ளித்திரையில்: தியோடர் பாஸ்கரன் : காலச்சுவடு பதிப்பகம்: விலை -  100 /-   

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...