Thursday, 11 April 2013

சார், நீங்க கவிஞரா?" கவிஞர் தேன்மிட்டாய் தமிழன், கேள்விப்பட்டதில்ல? " நண்பன் ராஜகோபால் கண்களை விரித்து கேட்டான். " இல்ல நண்பா, அப்படி ஒரு பெயரையே இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதில்ல, ஏன் அவர் என்ன அவ்ளோ பெரிய கவிஞரா? " ஆர்வத்தை அடக்க மாட்டாமல் நண்பனிடம் எதிர்கேள்வியை வீசினேன். " என்னடா இப்படி சொல்லிட்ட, அவர தெரியாமா தமிழ்நாட்ல யாருமே இருக்க முடியாது, அழகழகான வரிகள அப்படியே கடஞ்சி எடுத்து தாள்ல ஊத்துவாரு மச்சான், நீ அவசியம் அவர சந்திச்சே ஆகணும் " நண்பனின் வற்புறுத்தலாலும், நம்ம ஊரிலும் ஒரு மிக சிறந்த கவிஞர் இருக்காரா? எனும் ஆர்வ மிகுதியாலும் அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய சொன்னேன். இன்னும் ஒரு வாரத்திற்கு பல்வேறு இலக்கிய சந்திப்புகள் இருப்பதால் அடுத்த வாரத்தில் அவசியம் சந்திக்கலாம் என்று உறுதியளித்ததாக நண்பன் சொல்லி சிரித்தான். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பேர்ப்பட்ட கவிஞர் நம்மலயும் ஒரு ஆளாக மதித்து சந்திக்க நேரம் சிறிது ஒதுக்கி இருக்காரே!!! உண்மையிலேயே மிக சிறந்த மனிதர்தான் என்று உள்ளுக்குள் தேன்மிட்டாய் தமிழனின் பெருந்தான்மையை நினைத்து நெகிழ்ந்துபோனேன்.

" ஆப்பக்கட ஆயா.... நேரமாவுது நீ சீக்கிரம் எழுந்து வாயா..... "   

தேன்மிட்டாய் தமிழனின் கவிதைகளை நண்பன் ராஜகோபால் அந்த வாரம் முழுவதும் ஒவ்வொன்றாக சுவைக்கக் கொடுத்தான். மிகவும் இனிப்பாக இருந்தது. நாளாக நாளாக நிச்சயம் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் எழுந்து ஆடியது. " மச்சான் என்னால முடியல, இவ்ளோ சிறப்பான கவிதைகளை எழுதின ஒருத்தர இத்தன நாள் தெரிஞ்சுக்காம இருந்திருக்கேனே.... ஏசு என்னை மன்னிப்பாராடா? "  கண்களில் நீர் வழிய ராஜகோபாலின் கைகளை பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். " நிச்சயம் மன்னிப்பார் மச்சான், அவருக்கு மன்னிக்கிறது மட்டும்தான் வேலை. எதுக்கும் இன்னைக்கே போய் பாவ மன்னிப்பு கேட்டுரு, மனசு நிம்மதியா இருக்கும் " ராஜகோபால் என்னை ஆசுவாசப்படுத்தினான். நாட்கள் நெருங்கி வந்தது. தேன்மிட்டாய் தமிழனின் நினைவு அடிக்கடி மனதில் தோன்றி மறைந்தது.

" மேல தெரியுற வானமோ நீலம்...... கொய்யா பழம் வாங்கிட்டு வரேன்னு சொன்ன கோபால எங்க காணோம்.... " தேன்தமிழனின் புகழ்பெற்ற இந்த கவிதை குறித்து ஒரு நீண்ட உரையாடலை நிகழ்ந்த வேண்டும் என்று கடந்த சில தினங்களாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இந்த அளவுக்கு தத்துவ விசாரணையை மேற்கொண்டிருக்க முடியும். நினைக்க நினைக்க பிரம்மிப்பாக இருந்தது. " மேல தெரியுற வானமோ நீலம்...... கொய்யா பழம் வாங்கிட்டு வரேன்னு சொன்ன கோபால எங்க காணோம்.... " ஆம், நிச்சயம் இதுபற்றி அவரிடம் உரையாடியே தீரவேண்டும்.
" அதோ தெரியுதே பச்ச கலர் பெயின்ட் பூசின வீடு, அதுதான் அந்த மகான் குடியிருக்கும் கோவில், வாசல்ல ஒருத்தன் செருப்பு டோக்கன் போட்டுக்கிட்டு இருப்பான், அதிக நேரம் எடுத்துக்காம சீக்கிரம் சந்திச்சிட்டு வந்துடு.... நான் இங்கயே உட்கார்ந்திருக்கேன் "  தேன்மிட்டாய் தமிழன் குடியிருக்கும் ஆலயத்தை தொலைவிலிருந்து ராஜகோபால் விரல் நீட்டி காண்பித்தான்.

கவிஞர் தேன்மிட்டாய் தமிழன் என்றும், அடைப்புக்குறிக்குள் (கவிஞர போட கண்டிப்பா மறந்துடக்கூடாது) என்றும் எழுதியிருந்த அந்த பெயர் பலகை அவரது வீட்டின் கதவில் தொங்கி வரவேற்றது. உள்ளே இடுப்பில் ஒரு வெள்ளை வேஷ்டியும், மேல் சட்டை எதுவுமின்றி வெற்றுடலோடும் ஒரு மனிதர் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அவருக்கு எதிரே இருந்த சுமார் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனிடம் இலக்கிய உரையொன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார். " இங்க எவனுக்கும் கவிதைன்னா என்னான்னே தெரியல, என்னென்னமோ எழுதுராணுங்க, புதுக்கவிதையிங்குராணுங்க, பழைய கவிதையிங்குறானுங்க... செவ்வியில் கவிதைங்குறாணுங்க.. சேகரிச்ச கவிதையிங்குறானுங்க..  அப்போ நான் எழுதியிருக்கேனே அதுலாம் என்னன்னு கேட்டா.... அது போலி கவிதைன்னு சொல்லி உதைக்க வராணுங்க. அதான் இனி அவனுங்க அங்கீகாரமெல்லாம் நமக்கு தேவையில்லை, விருது இனி தானா வீடு தேடி வரணும் முடிவெடுத்து... ஷெல்ப்புல கொஞ்சம் இடத்தை ஒதுக்கி வச்சிட்டு இங்க வந்து ஒதுங்கிட்டேன் " அவரது குரலில் ஒரு திமிர் தெரிந்தது. அது அவருக்கு உகந்ததுதான் என்றே எனக்கு தோன்றியது. உடனே அந்த சிறுவன் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து " எனக்கு நேரமாவுது அங்கிள், நான் ஸ்கூலுக்கு போகணும் " கண்களை கசக்கிக்கொண்டு நின்றான். " வேற ஒருத்தன் சிக்கும் வரை உன்னை விடுவதாக இல்லையடா பொடியா " நம்பியார் குரலில் மிக தத்துரூபமாக மிமிக்ரி செய்து அசத்தினார். அந்த சிறுவன் அவனுக்கு எதிரிலிருந்த மேசையில் விரிந்துகிடந்த ராணி காமிக்ஸ் புத்தகம் ஒன்றை எடுத்து அவரது முகத்தில் வீசிவிட்டு தெறித்து ஓடினான். எனக்கு இந்த காட்சி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. " இந்த சிறுவர்களுக்கு கவிதையின் மகத்துவமே புரிவதில்லை " என்று முணுமுணுத்துக்கொண்டே கீழே விழயிருந்த தேன்மிட்டாயை உருட்டி எடுத்து அவரது இருக்கையில் உட்கார வைத்தேன்.

" உட்காருங்க தம்பி, நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? " இடுப்பிலிருந்து நழுவிய வேஷ்டியை சரிசெய்தபடி என்னை இருக்கையில் அமர சொல்லி கை காட்டினார். " ஐயா, நான் உங்க தீவிர விசிறிங்க, ராஜகோபால்ன்னு ஒரு நண்பர்தான் உங்க கவிதைகளை எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சாரு. அன்னையிலிருந்து நான் வேற யாரு எழுத்தையும் வாசிக்கிறதில்லைங்க " நிதானமாக சொல்லி நிறுத்தினேன். " நல்லவேலை செஞ்சீங்க தம்பி, இனியும் வாசிச்சிராதீங்க, உங்களுக்கு எப்போ கவிதை வேணுமோ சொல்லுங்க, உடனே உங்க அட்ரஸ்க்கு ஒரு கவிதை பண்டுலை பார்சல் அனுப்பி வைக்கிறேன். வருஷக்கணக்கா வச்சு படிங்க " குரலில் குதூகலம் தெறிக்க ஐயா சொன்னார். " எனக்கு ஒரு சின்ன சந்தேகங்க, ஏன் உங்க பேர தேன்மிட்டாய் தமிழன்னு வச்சிருக்கீங்க " கொஞ்சம் ஆபாத்தான கேள்வி என்பதால் தயங்கியபடியே கேட்டு வைத்தேன்.  " அதாவது தம்பி எனக்கு தேன்மிட்டாய்னா ரொம்ப பிடிக்கும், சோறு சாப்பிட்டதும், ரெண்டு தேன்மிட்டாய் எடுத்து கடவாய்க்கு அடியில் வச்சு கொறிக்கலனா என்னால அன்னைக்கு தூங்க முடியாது. கவித எழுதறதுன்னு முடிவு செஞ்சதுக்கு அப்புறம் எப்படியும் புனை பேரு பயன்படுத்தியே ஆகணும், அதான் நமக்கு ரொம்ப பிடிச்ச தேன்மிட்டாயவே பேரோட சேர்த்துக்கிட்டேன்.  கொஞ்சம் இனிப்பா இருக்கட்டுமேன்னுதான் " தோள்களை இருமுறை குலுக்கிக்கொண்டே கொல்லென சிரித்தார். நானும் சிரித்தேன்.

" அது சரிங்க ஐயா, ' மேல தெரியுற வானமோ நீலம்...... கொய்யா பழம் வாங்கிட்டு வரேன்னு சொன்ன கோபால எங்க காணோம்.... ' இதுபோல ஒரு வரியை எப்படி உங்களால அவ்ளோ சுலபமா எழுத முடிஞ்சுது " நீண்ட நாட்களாக மனதை குடைந்துக்கொண்டிருந்த கேள்வியை ஒருவழியாக கேட்டுவிட்ட திருப்தியில் அவரது பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். " தம்பி கவித எழுத ஒருவித மனநிலை தேவைப்படுது, அது ஒரு தரிசனம். உள்ளொளி. உடுக்கை ஒலி எல்லாம் உள்ளுக்குள்ள தாறுமாறாக தரிகிடதோம் போடனும். கால நேரமெல்லாம் கைக்கூடி வரணும்..” அவரது குரலில் ஒரு தேர்ந்த கிளி ஜோசியக்காரனின் பக்குவம் கைவரப்பெற்றிருந்தது. “இப்போ உங்களுக்கு ஒரு கொய்யா பழம் கிடைக்குதுன்னு வச்சிக்கோங்க, அத கொரிச்சிக்கிட்டே நீங்க கவித எழுதினா பின்ன எப்படி உங்க வரிகள்ல துயரம் வலிக்கும். பதிலா இப்படி யோசிச்சு பாருங்க, காலைலேயே உங்க பக்கத்து வீட்டு பையன்கிட்ட கொய்யா பழம் வாங்கிட்டு வர சொல்றீங்க, ஆனா அவனோ உங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு கொய்யாப்பழத்தோட தலைமறைவாகிடுறான். அப்போ உங்க மனசு எப்படி கெடந்து துடிக்கும், அழுகை எப்படி கண்ணுல அலையலையா கிளம்பி வழியும் அந்த ஓலத்தை வரிகள்ல வடிகட்டி இறக்குங்க, அதுக்கப்புறம் நீங்கதான் டாப்பு, கொஞ்சம் வெளியில போகணும் வச்சிருக்கீங்களா சீப்பு...... " சிரித்துகொண்டே கையை முன்னால் நீட்டினார். " இதான்யா, இதேதான்யா நான் தேடி வந்தது....  நீங்கதான் டாப்பு... கொஞ்சம் வெளியில போகணும் வச்சிருக்கீங்களா சீப்பு...... எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் டைமிங்ல பிண்ண முடியுது, சூப்பர் ஐயா... நீங்க சொன்ன வரிய அப்படியே ஒரு பேப்பர் எழுதி, கீழ சைன் பண்ணி கொடுங்க... எங்க வீட்டு சுவத்துல மாட்டி வச்சிக்கிறேன் " அன்றைய தினம்போல நான் பெருமகிழ்வோடு அதற்கு முன்பு இருந்ததில்லை. தான் பட்ட அசிங்கங்களை, அவமானங்களை அத்தனையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். விடைபெறும்போது கவிதை பண்டல் அனுப்பி வைப்பதற்காக என்னுடைய வீட்டு முகவரியை குறித்து வைத்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரையிலும், என்னுடைய வீட்டு தரையில் தேன்மிட்டாய் தமிழனின் கவிதை வரிகள்தான் கொட்டி கிடக்கின்றன. அன்று அவரது வீட்டிலிருந்து புறப்படும்போது ஒரு கவிதை சொன்னார்

" ஆட்டோல ஓடுது மீட்டர்..... விலை குறைஞ்சிடுச்சு வாங்கி தரியா ஒரு குவாட்டரு...................! "  


நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...