Wednesday, 10 April 2013

எம்.கே. பிநோதினி தேவியின் " இசை "எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருத்தி, தன்னுடைய வயதையும் , உடல் சோர்வையும் பொருட்படுத்தாது ஒரு இசை கச்சேரியின் ஒத்திகைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மூத்த மருமகள் அவளுக்கு உதவியாக பணிவிடைகள் செய்துகொண்டிருக்கிறாள். இன்னும் சில மணி நேரங்களில் கார் ஒன்று வருமென்றும், அதில் அவள் பயணம் செய்யலாம் என்றும் மாமியாரிடம் மருமகள் சொல்கிறாள். தன்னால் எழுந்து நடக்க முடியுமென்பதால் கார் ஏற்பாடு செய்திருப்பது வீண் வேலை என்று மூதாட்டி சலித்துக்கொண்டாலும், தன்னுடைய மருமகள் தன் மீது கொண்டுள்ள அன்பை நினைத்து மனம் உருகுகிறாள். பல காலமாகவே இவள் ஒருத்திதான் தன் மீது முழுமையான தூய அன்பை செலுத்துகிறாள் என்று நினைக்கையில் அவளுடைய கண்களில் கண்ணீர் தேங்குகிறது. மூதாட்டி பாராம்பரியம் மிக்க அரச குடும்பம் ஒன்றில் பிறந்தவள். இயற்கையாகவே இனிமையான குரல் வளமும், அழகான முகத்தோற்றமும் வாய்க்கப் பெற்றவள். அதனால் அவளுடைய அம்மா மகளுக்காவே பிரத்யேகமாக கலை நிகழ்ச்சிகளை அவளது இல்லத்தில் நடத்தி அதில் தன்னுடைய மகளை பாட செய்கிறாள். அதேபோல அவளுடைய பாட்டியும் இசை கச்சேரிகள் அரங்கேறும் இடங்களுக்கு அவளை அழைத்து செல்கிறாள். இசை மீதான அவளின் ஆர்வம்    நாளுக்கு நாள் செழித்து வளருகிறது. உடல் நிலை சரியில்லாத ஒரு நாளில் அவளை இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு அழைத்து சென்றதும், அவளுடைய உடல் குணமடைந்து விடுகிறது. அவள் அந்த பிரதேசத்திலேயே மிக சிறந்த பாடகியாக புகழடைய துவங்குகிறாள்.

மகளின் இசை ஆர்வத்தை முடக்க விரும்பாத, அவளையும் அவளுடைய இசையையும் நேசிக்கின்ற செல்ல செழிப்பான ஒரு குடும்பத்தில்  அவளுடைய அம்மா தன்னுடைய அன்பு மகளை திருமணம் செய்து வைக்கிறாள். ஆனால் அங்கு அவளுடைய இசை சாம்ராஜ்யம் சரிய துவங்குகிறது. குடும்ப சுமை அவளை அழுத்துகிறது. ஐம்பது வயதை கடந்த பின்னும் அவள் ஓய்வின்றி சுழன்றுகொண்டிருக்கிறாள். அதேபோல தன்னுடைய குடும்பத்தையும் மிக சிறப்பாக வழி நடத்துகிறாள். வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் மட்டும் மேடை ஏறுகிறாள். தன் மூன்று மகன்களையும் மிகுந்த பாசத்துடன் வளர்தெடுக்கிறாள். தன் குடும்பத்தில் தன்னை தவிர்த்து வேறு யாருமே இசை மீது பிரியமில்லாமல் இருப்பது அவளை வேதனையடைய செய்கிறது. தன் மகன்களிடம் இசை பயில சொல்கிறாள். அவர்களோ இசை என்பது கற்காலத்து கருவி என்று புறங்கையால் ஒதுக்கி தள்ளுகிறார்கள். பேரன்களோ இசைக்காக செலவிடும் தொகையில் நல்ல சினிமா படம் பார்த்து மகிழ்வடையலாம் என்கிறார்கள். ஆக அந்த வீட்டில் அவளும், அவளுடைய இசையும் தனித்து விடுபடுகிறது. மூதாட்டி கடந்தகால நினைவுகளில் சுழன்று திரும்புகிறாள். தன்னுடைய எழுபத்தைந்து ஆண்டுகால வாழ்வில் தன்னை முழுமையாக புரிந்துகொண்டவர்கள் யாருமில்லையோ என திடீரென்று அவளுக்கு தோன்றுகிறது. மூத்த மருமகள் ஒருத்திதான் மூதாட்டிக்கு பல காலமாக பணிவிடைகள் செய்து வருகிறாள் என்பதால் அவள் ஒருத்தியைதான் மூதாட்டி பெரிதும் விரும்புகிறாள். அதனால் மூத்த மகனுடன் தங்கிருக்க வேண்டிய காலம் முடிவடைந்துவிட்ட பின்பும் மூதாட்டி அங்கேயே தங்கிவிடுகிறாள்.

பல காலமாக கச்சேரிகளுக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டு வேலைகளில் மட்டும் தன் முழு கவனைத்தையும் செலுத்தி வந்த மூதாட்டி விரைவில் நடக்கவிருக்கும் குடும்ப விழாவொன்றில் பாட வேண்டும் என மருமகள் வற்புறுத்தியதும் உற்சாகமடைகிறாள். விழாவிற்கு தேவையான உடைகளை மகிழ்வுடன் தேர்வு செய்கிறாள். அதற்கான ஒத்திகைக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவளுடைய மகன் மூதாட்டியை வீட்டிலேயே இருக்க சொல்கிறான். தனக்கு வேலை இருப்பதாலும், தன்னுடைய மனைவி (மூத்த மருமகள்) தன் நண்பனது திருமணத்துக்கு செல்வதாலும், மூதாட்டி வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான். வீட்டில் யாரேனும் ஒருவர் இருக்க வேண்டியது அவசியம் என்கிறான். பலகாலத்துக்கு பிறகு பாட வாய்ப்பு கிடைத்த மகிழ்விலிருந்த மூதாட்டி இதனால் மனமுடைந்து போகிறாள்.   நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன், வீட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் இப்போதே வெளியேறிவிடுகிறேன் என்று துயரம் தோய்ந்த குரலில் கசப்புடன் சொல்கிறாள். மூதாட்டியை புரிந்துகொண்ட ஒரே ஜீவனான மூத்த மருமகளை மூதாட்டியின் துயரம் தொனிக்கும் குரல் வருத்தமடைய செய்கிறது. அதனால் தான் வீட்டில் இருக்க போவதாகவும் மூதாட்டி அவசியம் ஒத்திகைக்கு சென்றே ஆக வேண்டும் என சொல்லி சமாதானப்படுத்த முயல்கிறாள். " உங்கள் விருப்படியே செய்கிறேன், அதைத்தானே விரும்புகிறீர்கள் " என்று மூதாட்டி மீண்டும் கசப்புடன் சொல்கிறாள். கதை நிறைவடைகிறது.வெளி வெளிச்சம் அதிகம் படாத மலை பிரதேசமான மணிபுரியிலிருந்து பெண்களின் மீளா துயரை இசைத்து காட்டுகிறது எம்.கே. பிநோதினி தேவியின் " இசை " எனும் இந்த சிறுகதை. புகுந்த வீட்டில் பெண்கள் படும் துயரமும், நசுக்கப்படும் அவர்களது சுதந்திரமும் நடுத்தர வர்க்கத்து பெண்களுக்கு மட்டுமல்ல அரசகுல பெண்களுக்கும் பொதுவானதே என்பதை இச்சிறுகதை மிக ஆழமாக உணர்த்துகிறது. சிறு வயது சொகுசு வாழ்விலிருந்து வாரி சுருட்டிக்கொண்டு வரும் கனவுகள் புகுந்த வீட்டில் எப்படி நீர்த்து போகின்றன, அவர்களுடைய வாழ்வை எப்படி வெறுமை கவ்வி இழுத்துக்கொள்கிறது என்பதை துயரத்தை இழைத்து தனது எழுத்தில் தெளித்திருக்கிறாள் பிநோதினி தேவி. பெண்கள் அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. அதனாலேயே முழு கதையையும் சுருக்கி இங்கே பதிவிட்டுள்ளேன். எம்.கே. பிநோதினி தேவி தன்னுடைய The Princess and the Political Agent நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.  

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...