Saturday, 13 April 2013

நான் பார்த்த பாலு மகேந்திரா - 2சரியாக எட்டு மணிக்குள் வந்துவிடும்படி பாலு மகேந்திரா சாரின் அலுவலகத்திலிருந்து சில தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்திருந்தது. என்னால் நம்பவே முடியாத நிஜம் அது. எந்த இயக்குனரின் திரைப்படம் எனக்குள் பெரும் பாதிப்பை உண்டாக்கி, என்னை கோடம்பாக்கத்தை நோக்கி கொக்கிப் போட்டு இழுத்ததோ அந்த மனிதரை சந்திக்க எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்துக்கொண்டிருந்தேன். நாட்கள் நெருங்க நெருங்க மகிழ்வு கூடிக்கொண்டேபோனது. ஆனால் மெலிதாக ஒரு பயமும் உள்ளே நெருடாமல் இல்லை. அவர் எப்படிப்பட்டவர்? அதிகம் கோபப்படுவாரோ? ஒருவேளை நான் அனுப்பிய கடித்ததை பார்த்து என்னை கண்டித்து அனுப்பவே அழைக்கிறாரோ? மனம் எங்கெல்லாமோ தாவி சென்றது. ஆறாம் தேதி இரவுதான் நண்பர் திலீபனிடம் சாரை சந்திக்கபோகும் தகவலை சொன்னேன். என்னை காட்டிலும் அவர்தான் அதிகமாக உற்சாகமடைந்தார். வாழ்த்துக்கள் கூறி எனக்கிருந்த அச்சத்தை போக்கினார்.

என் உறகக்கத்தை விழுங்கிய அந்த இரவு வெகு சீக்கிரமாகவே விடிந்துவிட்டது. காலை விடிந்ததும் அவசர அவசரமாக நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்னாலிருந்த கிணற்றிலிருந்து நீரை இறைத்து குளித்து முடித்தேன். பார்க்க கொஞ்சமாவது சுமாராக தெரிய வேண்டுமென்று புதிதாக வாங்கியிருந்த நீல நிற சட்டையையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்துக்கொண்டேன். புதுவருட டைரியில் சாரிடம் கையெழுத்து வாங்க உத்தேசித்திருந்ததால், அந்த டைரியை கையில் எடுத்துக்கொண்டு என்ன நடந்தாலும் பரவாயில்லை, அந்த மனிதருக்கு அருகே ஒரே ஒரு முறை நின்றுவிட்டு வந்துவிட்டால் போதும் என்று எனக்கு நானே சமாதனம் செய்துகொண்டு, வடபழனியின் பரபரப்பான சாலையில் விறைப்பாக இறங்கி நடக்கத் துவங்கினேன். சாலையில் எதிர்பட்ட எல்லா மனிதர்களிடம் " நான் பாலு சாரை சந்திக்க போகிறேன் " என்று கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது. ஆனால் நாவை அடக்கிக்கொண்டு நடையை கட்டின்னேன். எனக்குள்ளே " காதல் கொண்டேன், கனவினை வளர்த்தேன் " பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் சுழன்றுகொண்டிருந்தது.

ஏ.வி.எம். ஸ்டுடியோவின் எதிரில் நீண்டு விரியும் தார் சாலையில்  நடக்கத்துவங்கினேன். நந்தன் ஸ்ரீதரன் சார் (ராமேஸ்வரம் படத்துக்கு வசனம் எழுதியவர்) சில தினங்களுக்கு முன்பு " பாலு மகேந்திரா சாரின் அலுவலகம் அந்த பக்கம்தான் இருக்கு " என்று விரல் நீட்டிய திசையில் என் கால்கள் போய்கொண்டிருந்தது. மிக நீளமான அந்த சாலையின் முடிவில் முட்டிமோதி வலப்புறம் திரும்பும் இடத்தில் சில டீ கடைகள் வரிசையாக இருந்தன. காலை இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதால் ஒரு கப் டீ அருந்தினேன். அந்த காலை வேளையிலேயே முகம் வியர்த்து வழிந்தது. உள்ளுக்குள் மனதின் கணம் நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போனது. செல்பேசியின் முகசுவரில் ஏழு மணி என அறைந்திருந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பாலு சாரின் அலுவலகத்தை பற்றி விசாரித்தேன். என்னை ஒருமுறை ஏறயிரங்க பார்த்தவர், " அதோ அங்க வரிசையா சில மீன் கடை இருக்கு பார், அத ஒட்டுனா மாதிரியிருக்கும் கட்டிடம்தான் அவரோட ஸ்டுடியோ " என்றார். " நன்றி அண்ணா " என்று அவரிடம் விடைபெற்றுவிட்டு, மிக குறுகலான அந்த சாலையில் நடக்கத்துவங்கினேன். ஒரு பள்ளிக்கூடத்தையும், ஆட்டோ அண்ணன் கைகாட்டிய மீன் கடைகளையும் கடந்ததும் அந்த சதுப்பு நிற கட்டிடம் என் கண்ணில் பட்டது. " பாலு மகேந்திரா சினிமா பட்டறை " என்று வெள்ளி எழுத்துகள் அந்த கட்டிடத்தின் முன் சுவரில் நெளிந்துகொண்டிருந்தது.  

இப்போதே உள்ளே போகலாமா? இல்லை இன்னும் சிறிது நேரம் கழித்து போகலாமா? மீண்டும் மனம் குழம்பிக்கொண்டிருந்தது. இனியும் தாமதித்தால் மனம் என்னை வேறு கோணத்தில் சிந்திக்க வைத்துவிடும் என்பதால் சட்டென்று அந்த நொடியோ உள்ளே நுழைந்தேன். வாசலில் சில செடிகள்  காற்றில் அசைந்தாடி என்னை வரவேற்றன. ஒருவர் அந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுக்காமல் வாசலை கடந்து அலுவலகத்தினுள் அடியெடுத்து வைத்தேன். உள்ளே பெருத்த அமைதி. ஊதிபத்தியின் வாசம் காற்றில் மிதந்து வந்து என் நாசியில் குடியேறியது. மனம் அந்த அமைதியுடனும், ஊதிபத்தி புகையுடனும் லயித்துப்போனது. அலுவலகத்தினுள் எதிர்பட்ட ஒரு பாட்டியிடம் " சார் இருக்காரா? " என்றேன். அவள் விழிகளை கோணலாக விரித்து ஒரு அறையை காண்பித்தாள். அந்த அறையில்தான் பாலு சார் இருக்க வேண்டும் என மனம் எடைபோட்டது. ஆனாலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதயம் வேகமெடுத்து துடித்தது. அரை நொடிக்கூட தாமதிக்காமல் அவரது அறையை நெருங்கினேன். அவரை காண்பதற்கு முன்பே அவருடைய இருமல் சப்தம் வெளியே எட்டிப்பார்த்தது. ஏற்கனவே பயந்திருந்த எனக்கு அவருடைய குரல் மேலும் கலகத்தை ஏற்படுத்தியது.  ஒரு நொடி அங்கேயே நின்று சர்வ நிச்சயமாக அவர் அங்குதான் இருக்கிறார் என ஊர்ஜிதப்படுத்திக்கொண்டப்பின் மெல்ல அடிமேல் அடிவைத்து அவரது அறையை நெருங்கினேன்.

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...