Skip to main content

நான் பார்த்த பாலு மகேந்திரா - 1" மூன்றாம் பிறை " படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று சரியாக கூட்டி சொல்வது அத்தனை சுலபமானதல்ல. சிறுவயதுமுதலே பல்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு தொலைக்காட்சி சேனலில் அந்த படத்தை பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சுயநினைவின்றி கமலஹாசனின் கரங்களுக்குள் அடைக்கலம் புகும் ஸ்ரீதேவியை ஒரு குழந்தையைப்போல அவர் வளர்த்து வருகிறார். அளவிட முடியாத அன்பை செலுத்துகிறார். ஊட்டி மலை பகுதியில் அவர்கள் தனியான ஒரு உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களது உலகத்தில் அன்பு மட்டுமே நிரம்பி வழிகிறது. ஸ்ரீதேவியின் அன்பு கமல்ஹாசனை ஒரு குழந்தையாக மாற்றிவிடுகிறது. ஆனால், இறுதியில் அவளுக்கு மீண்டும் தன்னுடைய கடந்தகால வாழ்வின் நினைவுகள் திரும்புகின்றன. அதனால் தன்னை தேடிவரும் பெற்றோரோடு அவள் கிளம்ப முற்படுகிறாள். கமலஹாசனுடன் வாழ்ந்த நாட்கள் அவளது நினைவிலிருந்து அழிந்து போகின்றது. ரயில் நிலையத்தில் அவளை தேடிவரும் கமல்ஹாசன் விஜி, விஜி என்று ஸ்ரீதேவியை விளித்து தன்னை அவளுக்கு நினைவுப்படுத்த முயலுகிறார். குரங்கை போல குட்டிகரணம் போடுகிறார். பானையை தலையில் சுமந்து அழுகிறார். இவையாவும் ஸ்ரீதேவி கமலஹாசனுடன் வாழ்ந்த நாட்களில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களாகும். ஆனால் ஸ்ரீதேவி அவரை பொருட்படுத்தாது அவள் வழியே செல்கிறாள். தொலைவில் மறையும் ரயிலை வெறித்துப் பார்த்தபடி ரயில் நிலைய கான்கிரீட் தரையில் அமர்ந்து கமல் அழுவதோடு படம் நிறைவடைகிறது. பாலு மகேந்திரா இயக்கத்தில் நான் பார்த்திருந்த ஒரே படமும், எனக்கு மிக மிக பிடித்த தமிழ்படமும் மூன்றாம் பிறைதான். அதனாலேயே சினிமா கனவுகளில் மிதந்துக்கொண்டிருந்த நான், சென்னை வந்து சேர்ந்ததும் முதல் முதலாக சந்திக்க விரும்பியதும் பாலு மகேந்திராவைதான்.

மலர் மன்னன் அண்ணன்தான் அந்த யோசனையை சொன்னார். ஒரு நல்ல சிறுகதையை எழுதி அவரது மெயிலுக்கு தட்டிவிட சொன்னார். என் எழுத்து பிடித்திருந்தால் நிச்சயம் அழைப்பார் என்றும் ஆர்வம் கூட்டினார். அதோடு அவசியம் வீடு படத்தையும் பார்க்க வற்புறுத்தினார். வீடு படம் என்னிடம் பல நாட்கள் முன்பிருந்தே இருக்கிறது என்றாலும், அது நடுத்தர வர்கத்து குடும்பத்தின் கதை என்று நண்பர்கள் சிலர் அச்சுறுத்தியிருந்ததால் அந்த படத்தை பார்க்க மிகவும் தயக்கமாக இருந்தது. சரி என்று ஒருநாள் படத்தை பார்க்க மனதை ஒருமுகப்படுத்திக்கொண்டு உட்கார்ந்தேன். பாகவதரின் சங்கீதம் பிண்ணனியில் ஒலிக்க டைட்டில் கார்ட் விழும்போதே  வீடு என்னை அதனுள் முழுமையாக இழுத்துக்கொண்டது. நடுத்தர வர்கத்தின் பெரும் கனவுகளில் ஒன்றான சொந்த வீடு எனும் கருத்தாக்கத்தில் வீடு படம் கட்டி  எழுப்பப்பட்டுள்ளது. அதிலும் கதாநாயகனும், கதாநாயகியும் மழை நாள் ஒன்றில் குடை பிடித்துக்கொண்டு வீடு தேடி அலையும் காட்சியும், அதன் பிண்ணனியில் ஒழுகும் இளையராஜாவின் இசையும் என் மனது கவ்வி இழுத்துக்கொண்டது. படம் முடிந்த சில நாட்களுக்கு பிறகும் அந்த இசை என்னுள் சொட்டிக்கொண்டேயிருந்தது. அதேபோல பாதி கட்டப்பட்ட நிலையில் நிற்கும் வீட்டினுள் நுழையும் பாகவதர், அதன் சுவரை தொட்டு வருடும் காட்சியில் சொந்த வீடு குறித்த பெருமிதம் அவரது முகத்தில் மின்னும். நடுத்தர வர்க்கத்துக்கு மனிதர்களின் சொந்த வீடு குறித்த ஏக்கத்தை பிரதிபலிக்கும் மிக மிக அற்புதமான காட்சி இது. தமிழில் உலக சினிமா இல்லை என்று சதா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சினிமா விமர்சகர்கள் இந்த படத்தை பார்த்திருப்பார்களா என்று அன்றைய இரவில் வெகு நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அதன் பிறகுதான் ஒரு யோசனை உதித்தது. சிறுகதை எழுதுவதற்கு பதிலாக " WHY I INSPIRE ON VEEDU AND MOONRAM PIRAI " என்று அவருடைய இந்த அற்புதமான இரண்டு படங்கள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வையே ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பினால் என்ன? உடனே எழுத துவங்கினேன். மூன்றாம் பிறையை என் சிறுவயது நினைவுகளில் படிந்துள்ள தோழி ஒருத்தியுடன் கழித்த நாட்களுடன் இணைத்தும், வீடு படத்தை என் பெற்றோரின் சொந்த வீடு கனவுகளோடு இணைத்தும் எழுதியனுப்பி இருந்தேன். ஆனாலும் மனம் கடந்து தவித்துக்கொண்டிருந்தது. கண்டிப்பா அழைப்பு வருமா? உடனே நான் அனுப்பிய கட்டுரையை வரி விடாது மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன். இதெல்லாம் ஒரு எழுத்தா? என்று பலமுறையும், ஓரளவுக்கு பரவாயில்லை என்று சிலமுறையும் தோன்றிக்கொண்டேயிருந்தது. நான் கட்டுரை அனுப்பியதை என் அறை தோழரும், நெருங்கிய நண்பருமான திலீபனிடம் கூட சொல்லவில்லை. நாட்கள் மெல்ல கரைந்துகொண்டிருந்தது. பணி சுமையின் அழுத்தத்தால் பாலு சாருக்கு அனுப்பிய கட்டுரையே நினைவிலிருந்து மங்கி மறைந்துபோயிருந்தது. ஒரு ஐந்து நாட்கள் கடந்ததும் புது எண்ணிலிருந்து ஒரு கால் வந்தது

" ராம் முரளி யா ? "
"ஆமா, நீங்க ? "
" நான் பாலு மகேந்திரா சார் அலுவலகத்திலிருந்து பேசுறேன், நீங்க ஒரு கடிதம் அனுப்பினீங்க இல்லையா.... சார் அத படிச்சிட்டு, உங்கள பாக்கனும்னு சொல்லியிருக்காரு "
என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்து போயிருந்த நான் மீண்டு வருவதற்கே சில நொடிகள் தேவைப்பட்டது.
" மேடம் உண்மையாவா சொல்றீங்க, சார் நிஜமாவே என்ன பாக்குறேன்னு சொல்லியிருக்காரா? "
" ஆமாங்க, திங்கள்கிழமையன்று காலைல ஒன்பது மணிக்கெல்லாம் வந்து பாருங்க... ஓகே வா ? "
" நிச்சயம்.... நிச்சயம் மேடம், அவசியம் காலை வந்துடுறேன், ரொம்ப நன்றி மேடம் "
அழைப்பை துண்டித்த நொடி, என் கால்கள் தரையில் இல்லை. எங்கோ வெகு தொலைவில் பூமியின் தரை தெரியாத அண்ட வெளியில் ஆக்சிஜன் பையோடு மிதந்துக்கொண்டிருந்தேன். இளையாராஜாவின் இசை (HOW TO NAME IT) மீண்டும் ஆக்கிரமித்துக்கொண்டது.

திங்களன்று பாலு சாரை சந்திக்க தயாரானேன்....    
  

Popular posts from this blog

காட்ஃபாதர் பேசுகிறார்...! பிரான்சிஸ் ஃபோர்ட் கப்பாலோ நேர்காணல் தமிழில்: ராம் முரளி

காட்ஃபாதர் திரைப்படத்தினை இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட முறையாவது பார்த்திருப்பேன். ஒருபோதும் அப்படம் எனக்கு துளி சலிப்பையும் ஏற்படுத்தியதில்லை. வசீகரமான மாய கனவொன்றில் நுழைந்து சிறிது நேரம் உலாத்திவிட்டு மனமொப்பாது மீண்டும் இயல்புக்கு திரும்பும் உணர்வே ஒவ்வொருமுறை காட்ஃபாதரை பார்த்து முடிக்கும்போதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “ஒரு திரைப்படம் முடிவடைகின்றபோது, அதன் மைய கதாப்பாத்திரத்திடமிருந்து விடைபெறுதல் என்பது மிகவும் துன்பகரமானது” என்ற புகழ்பெற்ற இயக்குனர் ஒருவரின் மேற்கோள் காட்ஃபாதர் திரைப்படத்துக்கு மிக கச்சிதமாக பொருந்தும். காட்ஃபாதராக திரையில் நடமாடிய மர்லன் பிராண்டோவின் சிறுசிறு அசைவுகளும் என்னை பெரிதும் வசீகரித்திருக்கிறது. மிகப்பெரிய மாஃபியா கும்பலொன்றின் தலைவனாக அறிமுகமாகி, தன் குடும்பத்தின் மீதான அன்பினால் இறுதியில் தனது கட்டுறுதி குலைந்து சிறுபிள்ளைப்போல அழுகின்ற பிராண்டோவின் முகம் இப்போதும் நினைவில் தங்கியுள்ளது. அல் பாசினோ – ராபர்ட் டி நிரோ என்ற மிகச்சிறந்த இரு நடிகர்களை அடையாளம் காட்டிய காட்ஃபாதர் திரைப்படம் உலகின் மிக முக்கியமான பல இயக்குனர்களையும் அதிக தாக்கத்து…

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளி

குப்ரிக்கின் திரைக்கலை! – ஸ்காட் பெக்ஸ் தமிழில்: ராம் முரளி

1999ல் ஸ்டான்லி குப்ரிக் மரணத்தை தழுவி விட்டபின்பும், இதுவரையிலும் இருபது படங்களிலாவது அவருடைய பெயர் டைட்டில் கார்டில் தொடர்ந்து விழுந்துக்கொண்டுதான் இருக்கின்றது. உலகின் எண்ணற்ற இயக்குனர்கள் தங்களின் திரைப்படங்களின் மூலமாக தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டும், அவரைப்பற்றிய படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். அவரது திரைபாணி ஏற்படுத்திய வீரியமிக்க தாக்கத்தால், பல இளைஞர்கள் அவரது புகழை உலகம் முழுவதும் இன்றும் பரப்பி வருகிறார்கள். அவருடைய இறுகலான குறும்புத்தனம் நம்மை ஆடம்பர உணவகங்களுக்கும், சண்டைகளற்ற போர் அறைகளுக்கும், வான் வெளிக்கும் அழைத்து சென்று பரவசமடையவும், பதைபதைத்து நடுங்கவும் செய்திருக்கின்றது.

சினிமா சார்ந்த உரையாடல்களில் தவிர்க்கவியலாத, என்றென்றும் நிலைத்திருக்கும் புகழை அடைந்திருக்கிறது அவருடைய பெயர். பாரம்பரியமிக்க வணிக சினிமாவிலிருந்து முற்றாக விலகி அதிகம் சர்ச்சைக்குரிய சவாலான களங்களை மிகுந்த மேதமையுடன் கையாண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் அழியா புகழை அடைந்திருக்கிறார் ஸ்டான்லி குப்ரிக்.

எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள…