Friday, 29 March 2013

கரகம் என் உயிருக்கும் மேல்...

கரகாட்டம் , மயிலாட்டம் , காளைமாட்டு ஆட்டம் , பொய்கால் குதிரை என கொங்கு மண்டலத்தின் மண் சார்ந்த அனைத்து கலைகளிலும் அறை நூற்றாண்டு காலம் தனது காலில் சலங்கை கட்டி ஆடியவர் அய்யாவு. இவர் கொங்கு மண்டலத்தின் பல கரகாட்ட கலைஞர்களின் குருவும் ஆவர். தற்போது ஆர்.எஸ்.புரத்தில் ஒரு குடிசை வீட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் அய்யாவுவை ஒரு காலை பொழுதில் சந்தித்தேன்.

                   " நான் சின்ன பையனாக இருந்தபோது இதே கோவையில் சி.எம்.மாணிக்கம்னா எல்லோருக்கும் தெரியும். புகழ் பெற்ற கரகாட்டகாரர் அவர். கரகத்தில் அவர் செய்யாத சாகசங்களே இல்லை. அவரு காலில் சலங்கையை கட்டிக்கிட்டு தலையில் கரகத்தை தூக்கி வச்சா போதும் ஊரே மெய் மறந்து பார்க்கும். நானும் அவருடைய கரகத்தையும் அதன் பிண்ணனியில் வாசிக்கும் மேள சத்தத்தையும் கேட்டு மயங்கி விடுவேன். எங்கள் வீடு மாணிக்கம் அய்யா வீட்டுக்கு பின்னால் இருந்தது எனக்கு ரொம்ப வசதியா போச்சு, ஊர் திருவிழாக்களில் மட்டும் வெளியே தலை காட்டும் மாணிக்கம் அய்யாவை நான் மட்டும் அவருடைய வீட்டுக்கே போய் பார்ப்பேன். எப்படி இந்த மாதிரி எல்லா சாகசத்தையும் அலட்டாம அசால்டா செய்றீங்கனு கேட்பேன். இந்த கேள்விலிருந்து தான் எனக்கும் மாணிக்கம் அய்யாவுக்கும் இடையே குரு - சிஷ்யன் உறவு துவங்குச்சு.


          மாணிக்கம் அய்யாவின் சி.எம்.மாணிக்கம் கரகாட்ட குழுவில் என் 7 வயதிலேயே சேர்ந்திட்டேன். எங்கள் குழு இரண்டு மாட்டுவண்டியை கிளப்பிக்கிட்டு கோவை முழுவதும் ஊர் ஊரா பயணிக்கும். நானும் அந்த மாட்டு வண்டியில் ஒரு மூலையில் கையில் கரகத்தை வச்சுக்கிட்டு அய்யா பேசுவதை காதுகொடுத்து கேட்டுக்கிட்டே பயணிப்பேன். பெரும்பாலும் அய்யா கரகத்தை மட்டும் தான் பேசுவார். அப்போலாம் கரகாட்டம்னா ஊரே ஒன்னுகூடி கைத்தட்டி ஆரவாரம் செஞ்சு  உற்சாகம் ஊட்டுவாங்க. அந்த உற்சாகமும் கைதட்டலும் தான் எங்கள் கலையை செழிப்பாக வாழவச்சுது. தை மாசம் துவங்கி மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி வரை கோவையில் உள்ள எல்லா கோவில்களிலும் தொடர்ந்து ஓடி ஓடி கரகம் ஆடிக்கிட்டு இருப்போம். அய்யாவோட காலத்துக்கு அப்புறம் நான் தனியா ஒரு கரகாட்ட குழுவை  அய்யாவு கரகாட்ட குழுனு பேர் வச்சு தொடங்கினேன். அதில் நாங்க கரகாட்டத்தோட நிறுத்திடாம மயிலாட்டம் , காளைமாட்டு ஆட்டம் , பொய்கால் குதிரைனு சகல கலைகளையும் உள்ளே கொண்டு வந்தோம். சி.எம்.மாணிக்கம் கரகாட்ட குழுவுக்கு அப்புறம் நீண்ட காலம் நிளைச்சு நின்ன குழு எஙகள் குழு தான். மயிலாட்டட்துக்கு இரண்டு பேர் , காளைமாட்டு ஆட்டத்துக்கு இரண்டு பேர் , பொய்கால் குதிரைக்கு இரண்டு பேர்னு எங்களுக்குள்ளாகவே பிரிச்சுக்குவோம். எனக்கு எப்போதும் கரகம் தான்னாலும் ஆள் இல்லாத சமயத்தில் மத்த ஆட்டங்களையும் சேர்த்தே ஆடுவேன்.  அப்பொல்லாம் கூப்பிட்ட வுடனே போய் ஆடிட முடியாது, ஒரு ஆட்டத்துக்கு எங்களை புக் பண்ணனும்னா 3 மாசம் முன்னாடியே புக் பண்ணி ஆகனும். இல்லைனா தேதிகள் இருக்காது. அதே போல கரகம் ஆட பெருசா அரங்கம் எல்லாம் தேவையில்லை. சும்மா ஒரு வெட்ட வெளி இருந்தாலே. இது மண் சார்ந்த விளையாட்டுங்கிறதால மக்களோட மக்களாவே கலந்து தான் கரகம் ஆடுவோம். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் 3 மணி நேரம் முன்னாடியே அரிதாரமெல்லாம் பூசிக்கிட்டு கரகத்துக்கு பூவல்லாம் சுத்தி தயாராகிடுவோம். களத்துல இறங்கிட்டா அவ்ளோதான் வேற நினைப்பே கிடையாது ஆட்டம் மட்டும் தான் நினைப்பில் இருக்கும். பல சமயங்கள்ல 6 மணி நேரமெல்லாம் ஆட்டம் தொடரும். என்ன தான் இந்த ஆட்டத்தால கஞ்சிக்குடிக்கிற அளவுக்கு காசு கிடைச்சாலும் இது உசுருக்கும் மேல்.
               

    கரகம் ஆடுறது தான் சுவாரஸ்யமா இருக்கும்னா , கரகம் ஆட போறப்ப நிகழும் சம்பவங்கள் அதைவிட சுவாரஸ்யமா இருக்கும் . அப்படி தான் ஒரு தடவை மாட்டு வண்டியில வெள்ளயங்கிரி மலையை தாண்டி இருக்கும் சீங்கபதி பகுதிக்கு கரகம் ஆட போறப்ப திடீர்னு ஒரு காட்டெருமை வண்டியை மறைச்சுக்கிட்டு நின்னுடுச்சு. எல்லோரும் ரொம்பவே பயந்துவிட்டோம். அப்ப தான் எங்க கூட பயணிச்ச சீங்கபதி ஊர்காரர் ஒருவர் கையில தான் மேளமெல்லாம் வச்சிருக்கீங்களே அதை நாலு தட்டு தட்டுங்கன்னார். உடனே நாங்களும் கையில இருந்த மேளத்தை கொட்டத்துவங்கிவிடோம் , கொஞ்சம் நேரம்மொறச்சு பார்த்துக்கிட்டு இருந்த காட்டெருமை எங்கள் மேள முழகத்தை கேட்டு திரும்பி போகிடுச்சு. அப்ப தான் உசுரே வந்ததுஅப்படி பல சம்பவங்கள் எங்கள் பயணங்களில் நிகழும்.

       இப்போ எனக்கு 66 வயசு , தொடர்ந்து பல வருடங்கள் இப்படி ஊர் ஊரா சுத்தின என் ஆட்டம் 9 வருஷத்துக்கு முன்னாடி என் காலில் சர்க்கரை வந்து கால்களை அசைக்க முடியாமல் போனபோது முடிவுக்கு வந்துச்சு. இனிமேல் ஆடவே முடியாதுனு மருத்துவர்கள் சொன்ன நிமிடம் நான் உடஞ்சே போய்ட்டேன். அழுகையும் , இப்படி ஆட முடியாம போய்ட்டோமேனு அவமானமும் ஒன்னா என்னை தாக்க ஆரம்பமாகிடுச்சி. ஆனால் உண்மையில் எங்கள் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டிருச்சு. காலாகாலமா தொடர்ந்துக்கிட்டு வந்த எங்கள் கலையை ஒதுக்கி வச்சுட்டு ஊராரும் , ஊர் மக்களும் டிஸ்கோ டான்ஸை விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க. இன்றைய தலைமுறைக்கி கரகாட்டம்னு ஒன்னு இருக்குனு தெரியுமானு சந்தேகமா இருக்கு. ஆனா இப்பவும் என் மனசு அந்த பழைய கரகத்தை சுமந்துக்கிட்டு தான் இருக்கு. இன்னைக்கு முடியலைனாலும் என்னைக்காவது ஒரு நாள் இந்த கரகத்தை தலையில் சுமந்து ஆடுவேன் " உறுதியாக முடித்துக்கொண்டார் அய்யாவு.

அய்யாவுவிடம் பேச: 9629334148

நன்றி: விகடன், பால நாக அபிஷேக்

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...