Thursday, 28 March 2013

மஜித் மஜீதி - நேர்காணல்

தன் சகப் பள்ளித் தோழர்கள் ஒவ்வொருவராக தங்களது பெற்றோரின் விரல் பிடித்து, கோடை விடுமுறைக்காக வீடு நோக்கி சென்றுக் கொண்டிருக்க, பள்ளியின் முகப்பில் உள்ள ஒரு சிமென்ட் பெஞ்சில் தன் பெற்றோரை எதிர்ப்பார்த்தபடித் தனிமையில் அமர்ந்திருக்கிறான் கண்பார்வையற்றவனான மொகமத். யாருமற்ற அந்த நிசப்த வெளியில் மொகமத்தின் முதுகுக்குப் பின்னாலிருந்து ஒரு சிறு பறவையின் கிறீச்சிடும் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதர்களால் நிச்சயமாக உணரமுடியாதப் பறவையின் மெல்லிய அழுகை கண்பார்வையற்றவனான மொகமத்தின் காதுகளில் மிகத் துல்லியமாக விழுகிறது. காற்றின் தீராத வீச்சினால் மரத்திலிருந்து உதிர்ந்துக் கிடக்கும் சருகுகளின் ஊடாக மொகமத் தவழ்ந்தபடியே அந்த பறவையின் குரலை துரத்திச் செல்கிறான். அப்போது ஒரு பூனை பசியோடு உறுமும் மர்மக் குரலும் அவனுக்கு கேட்கிறது. மொகமத் தன்னை சுற்றி நிகழும் காட்சியை மனத்தின்மையின் மூலமாக உணருகிறான். அப்போது அவனது கைக்கு மரக்குச்சி ஒன்று தட்டுபடுகிறது. அதனை அந்த பூனையை நோக்கி வீசி எரிகிறான். பூனை பயந்துப் பின்வாங்குகிறது. பின் மீண்டும் பறவையின் குரலை துரத்தும் மொகமத் மரமொன்றின் அடியில் கிடக்கும் கண் திறக்காத சிறு பறவையை கண்டெடுக்கிறான். முளைவிடாத அதன் சிறகை மெல்ல வருடிப் பரவசமடைகிறான். தன்னருகில் நீண்டிருக்கும் மரத்திலிருந்துதான் அந்த பறவை இடறி விழுந்திருக்க வேண்டும் என்பதை உணரும் மொகமத், மெல்ல தன் பிஞ்சு விரல்களால் ஒவ்வொரு கிளையாக பிடித்து மேலேறி அந்த சிறிய பறவையை அதன் தாயிடம் சேர்கிறான். உலகின் மகத்தான இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் ஈரானிய இயக்குனரான மஜீத் மஜீதியின் “ THE COLOR OF PARADISE “ எனும் திடைப்படத்தில் இடம்பெறும் இந்த துவக்கக் காட்சியில் ஒரு கண்பார்வையற்ற சிறுவனிடம் ததும்பும் எல்லையில்லாத அன்பும், ஒலியின் மூலமாகவே பறவையின் வலியை உணர்ந்து அதனை அதன் தாயுடன் சேர்க்கும் மனிதநேயமும் நிச்சயம் நம் மனதை கலங்கடித்துவிடும்.

மஜித் மஜீதியின் திரைப்படங்கள் வாழ்வின் அழகியலையும், சிறு வயது நினைவுகளையும் கிளறச் செய்பவை. ஈரானிய நடுத்தரக் குடும்பங்களின் வலியை பேசுபவை. வறுமையும், துயரமும் வாட்டியெடுக்கும் நிலையிலும் அவர்களுக்குளாக மின்னி மறையும் எளிய சந்தோஷங்களை பதிவு செய்பவை. ரொட்டி வியாபாரியும், அகதிகளும், கரடு முரடான கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களும்தான் அவரது பிரதானப் பாத்திரங்கள். எனினும் ஒரு நவீன ஓவியத்தைப் போல அவர்களின் உணர்வுகளை செல்லுலாய்டில் கோர்த்தவை. “ CHILDRENS OF HEAVEN “எனும் அவரது திரைப்படம்தான் இன்று உலகின் மிகச் சிறந்த திரைப்படமாக சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. அதிகம் அறியப்படாத ஈரானின் அரசியலையும், அதன் சமூகக் கலாச்சார வாழ்வியலையும் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிகத் துல்லியமாக மகத்தான சினிமாக்காளாக உருவாக்கிய மஜீத் மஜீதியிடம் திரைப்பட விமர்சகரும், எழுத்தாளருமான ரோஸ் ஆண்டனி மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் இது1. அதிகாரத்துவ அரசியலைப் பற்றி அமெரிக்காவில் எந்த இயக்குனரும் அத்தனை எளிதில் படம் இயக்கிவிடமுடியாது. ஈரானில் அத்தகைய சூழல் எப்படி இருக்கிறது?


ஈரானை பொருத்தவரையில், திரைப்படத்துறை அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அரசாங்கமே சில முதலீடுகளை திரைத்துறையில் குவித்துள்ளது. படப்பிடிப்பு சாதனங்களை, சினிமா தயாரிப்பு தொடர்பான உபகரணங்களை அரசாங்கமே வாடகைக்கு கொடுக்கிறது. அதனால் அனைத்து இயக்குனர்களும் படப்பிடிப்புக்காக அரசாங்கத்தின் உதவியை நாடவேண்டியுள்ளது. இதன்மூலம் திரைத்துறையின் மீதான தங்களது ஆதிக்கத்தை அரசு தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது. அரசாங்கம் மனது வைத்தால் எந்த ஒரு படத்தையும் மிக சிறந்த கலைப்படைப்பாக கொண்டாடவும் முடியும், சர்சைக்குரிய படமாக இருந்தால் ஒரு வருடத்திற்கும் மேலாக சம்பந்தப்பட்ட இயக்குனரை வேறு எந்த படமும் இயக்கவிடாமல் முடக்கவும் முடியும். 2. உங்களுடைய திரைப்படங்களில், மிக குறுகலான ஈரானிய கிராமத்து பாதைகளில், சிறுவர்கள் வரிசையாக ஊர்ந்து செல்வது போல பல காட்சிகளை வைத்திருக்கிறீர்கள். உண்மையில் அத்தகைய காட்சிகள் எப்படி படமாக்கப்படுகின்றன? சிறுவர்களை இயல்பு மாறாமல் இத்தகைய காட்சிகளில் எப்படி நடிக்கவைக்கிறீர்கள்?

அத்தகைய காட்சிகளின்போது கேமராவை நாங்கள் சிறுவர்களிடம் காண்பிப்பதில்லை. சிறுவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு கேமராவை மறைத்துவைத்தே நாங்கள் படமாக்குகிறோம். இந்த வகையில் இயக்கும்போது, சிறுவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தாலும், அது இயல்பு போலவே அமைந்துவிடுகிறது. அந்த இயல்பையே நான் பெரிதும் விரும்புகிறேன். சிறுவர்கள் மட்டுமல்லாது படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களின் காட்சிகளை இயக்கும்போதும் கேமராவை மறைத்து வைத்தே இயக்குகிறோம். அப்போதுதான் நடிகர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்க முடிகிறது. வழக்கமான பாணியில் திரைப்படத்தை இயக்குவதை விடவும் இப்படி கேமராவை மறைத்துவைத்து இயக்குவது கடினமானது. எனினும் திரைப்படங்களை அழகுணர்ச்சியோடும், இயல்பாகவும் இயக்குவதற்கு இதுவே சிறந்த வழி.

3. உங்களுடைய சினிமா வாழ்க்கை எந்த வயதில் துவங்கியது?


நான் என்னுடைய பனிரெண்டாவது வயதில் முதல் முதலாக நாடக மேடையில் நடிகனாக அறிமுகமானேன். நாடக மேடையின் எதிரே எண்ணற்ற பார்வையாளர்கள் என்னுடைய நடிப்பை எதிர்பார்த்தபடி தங்களுடைய இருக்கைகளில் அமைதியாக அமர்ந்திருந்த காட்சி என்னை பெரிதும் கவர்ந்தது. நான் நாடக சூழலால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். பின், திரைப்படம் இயக்கும் வாய்ப்பு தானாக தேடி வந்ததும் அதனை ஏற்றுக்கொண்டு என்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினேன். அது மிகவும் சவாலாக இருந்தது. முதல் படமே மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டதால் சற்றே தடுமாற்றங்கள் துவக்கத்தில் இருந்தன. ஆயினும் நான் நினைத்தை திரையில் கொண்டுவந்துவிட்டேன். எந்த ஒரு இயக்குனருக்கும், தன்னுடைய  முதல்படம் இயக்கும்போது பல தடைகள் வந்துக்கொண்டேதான் இருக்கும். ஆனால் அத்தகைய எந்த ஒரு தடையும் படைப்பில் பிரதிபலித்துவிடக்கூடாது.

( ஆகஸ்ட் மாத அம்ருதா இதழில் வெளியானது )

நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...