Wednesday, 27 March 2013

க்வெண்டின் டேரண்டினோவின் புதியப்படம்

தனது வித்யாசமான திரைக்கதைகளின் மூலம், உலக சினிமா அரங்கில் ஒரு புதிய அலையை உருவாக்கிய அமெரிக்க இயக்குனரான க்வெண்டின் டேரண்டினோவின் சமீபத்திய திரைப்படமான ட்ஜாங்கோ அன்செயின்ட்டு (Django Unchained) திரைப்படத்தை பார்த்தேன். 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவில் நிலவிய பண்ணை அடிமைத்தனத்தின் பிண்ணனியில் ஒரு ஆக்சன் கதையை டேரண்டினோ சொல்லியிருக்கிறார். முன்பே ஒரு பேட்டி ஒன்றில் " பண்ணை அடிமைத்தனம் என்பது அமெரிக்க வரலாற்றின் மையத்தில் படிந்துள்ள விவரிக்க முடியாத துயரமாகும். அந்த துயர வாழ்வை திரையில் சொல்ல மனதிடம் வேண்டும், பல அமெரிக்க இயக்குனர்கள் கடந்த கால வரலாற்றை பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். பிற நாட்டு இயக்குனர்களோ இந்த பண்ணையடிமைத்தனம் அமெரிக்கர்களின் பிரச்சனை, இதில் தாங்கள் தலையிட முடியாது என்று ஒதுங்கிக் கொள்கின்றனர். அதனால் நான் பண்ணையடிமைத்தனத்தை மையப்படுத்தி ஒரு ஆக்சன் படத்தை இயக்க விருக்கிறேன், நினைவில் கொள்க, இது சீரியஸ் படம் கிடையாது " என்று தெளிவாக விளக்கிவிட்டதால், இது ஆக்சன் படமாக பயணிப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.ஆனாலும் அமெரிக்க பண்ணைகளில் அன்று நிலவிய கறுப்பர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை பதிவுசெய்ய டேரண்டினோ தவறவில்லை. படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு நீண்ட வரிசையில் நீக்ரோக்களை பண்ணை ஒன்றிற்கு அடிமைகளாக இரண்டு வெள்ளையர்கள் அழைத்து செல்கின்றனர். நீக்ரோக்களின் முதுகில் வரி வரியாக சதை கிழிந்திருக்கிறது. வெள்ளையர்களின் சாட்டையடியால் அவர்களின் முதுகு சதை கிழிந்திருப்பதாக ஒரு துண்டு காட்சி காட்டப்படுகிறது. அடிமைகளோடு அடிமைகளாக இந்த வரிசையில் முதுகில் அதிக கோடுகளோடு ட்ஜாங்கோவும் பயணித்துக்கொண்டிருக்கிறான். பிரிட்டல் சகோதரர்களின் இருப்பிடத்தை காண்பிப்பதாக இருந்தால் அவனை அங்கிருந்து காப்பாற்றுவதாக பவுன்டி ஹண்டர் எனப்படும் பணத்துக்கு ஆள்களை கொல்லும் பல் மருத்துவர் ஒருவர் அவர்களின் பாதையில் தோன்றி  கேட்கிறார். அவன் சம்மதித்ததும் அந்த இரண்டு வெள்ளையர்களில் ஒருவனை கொன்றுவிட்டு, மற்றொருவனை குதிரையிலிருந்து கீழே விழச்செய்துவிட்டு அவனை காப்பாற்றுகிறார். பிரிட்டல் சகோதரர்களை இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள். பின் ட்ஜாங்கோ தனது மனைவியும் ஏதோ ஒரு பண்ணையில் அடிமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்று மருத்துவரிடம் சொல்கிறான். இருவருமாக சேர்ந்து ட்ஜாங்கோவின் மனைவியை மீட்க மிசிசிப்பிக்கு விரைகிறார்கள். அங்கு மிகுந்த செல்வந்தராக வாழ்ந்துக்கொண்டிருக்கும் கேண்டி என்பவரது வீட்டில் அவள் அடிமையாக வாழ்கிறாள் என அவர்களுக்கு தெரியவருகிறது. இதனை தொடர்ந்து, ட்ஜாங்கோவின் மனைவியை மீட்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சியும், அதில் அவர்கள் வென்றார்களா என்பதுமே மிச்ச திரைப்படம். 

இரு நீக்ரோக்களை மோதவிட்டு, தனது அலுவலக சகாக்களோடு அவர்களது மோதலை ரசித்து சிரித்தபடி பண்ணை முதலாளி கேண்டியாக லியோனார்டோ டிகாப்ரியோ அறிமுகமாகும் காட்சி அபாரம். உண்மையில் அங்கிருந்துதான் மொத்த திரைப்படமும் தொடங்குகிறது. லியோனார்டோ டிகாப்ரியோ உதடுகளில் கசியும் புன்னகையோடு, கண்களை இடுக்கி பார்க்கும்போதே வில்லத்தனம் தெறிக்கிறது. நாய்களைவிட்டு கறுப்பர்களை கடிக்க விடுவது, பல் மருத்துவரின் உதவியாளனாக ட்ஜாங்கோ குதிரையில் வரும்போது, சங்கிலியில் பிணைந்தபடி நடந்துசெல்லும் கறுப்பர்கள் அவனை பார்த்து முறைப்பது, வெள்ளையர் வாழும் பகுதிக்கு ட்ஜாங்கோவும், பல் மருத்துவரும் செல்லும்போது ஊரே ஒன்றுகூடி அதிசயமாக பார்ப்பது, பண்ணையொன்றில் கறுப்பின பெண்களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது, என படம் நெடுகிலும் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் ஆதிக்கம் மிகையில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் காட்சிக்கு காட்சி யாராவது ஒருவர் குண்டடிப்பட்டு, ரத்தம் தெறிக்க விழுந்து சாகிறார்கள். தனது முந்தைய படங்களைபோலவே டேரண்டினோ இந்த படத்திலும் அதிகளவில் வன்முறை காட்சியை பயன்படுத்தியுள்ளார். அதிலும் இறுதிக்காட்சியில் சுமார் கால் மணி நேரத்துக்கு துப்பாக்கி வெடிப்பதும், ரத்தம் தேறிப்பதுமாகவே இருக்கிறது. வெள்ளையன் ஒருவனால் விடுவிக்கப்பட்ட அடிமை ஒருவன் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக சுழற்றும் சாட்டைதான் படத்தில் மெயின் தீம். அதேபோல பண்ணை முதலாளியாக வரும் கேண்டியின் கதாப்பாத்திரத்தை இயக்கும் சக்தியாக டேரண்டினோ ஒரு நீக்ரோவை படைத்துள்ளார்.  இதன்மூலம் கறுப்பர்களில் சிலர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு சுயநல நோக்கோடு மற்ற கறுப்பர்களை அடிமைப்படுத்துவதில் வெள்ளையர்ககோடு கரம் கோர்ந்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். படம் நெடுகிலும் ட்ஜாங்கோவும் அவனது மனைவியும் இணைவார்களா? மாட்டார்களா? என மனம் அரித்துக்கொண்டே இருந்தது. முடிவை அறிந்துக்கொள்ள படத்தை பாருங்கள்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது இசையும், ஒளிப்பதிவும்தான். பல்மருத்துவரையும், ட்ஜாங்கோவையும் பாடல்கள் மூலமாகவே டேரண்டினோ அறிமுகப்படுத்துகிறார். அதேபோல இது ஒரு ஆக்சன் படம் என்பதால் வெஸ்டர்ன் இசை மிகவும் உறுதுணையாகவும், விறுவிறுப்பு கூட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருளில் பல நூறு வீரர்கள் கைகளில் விளக்குடன் குதிரையில் வரும் காட்சி ஒரு ஓவியம்போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் டேரண்டினோவின் ரசிகர்களுக்கு இதுவொரு விருந்து. ஏற்கனவே இத்திரைப்படம் டேரண்டினோவின் முந்தைய எந்த படத்தை காட்டிலும் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேபோல ஆஸ்கார் விழாவில் பல் மருத்துவராக நடித்துள்ள கிறிஸ்டோப் வால்ட்ஸ்க்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், டேரண்டினோவுக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.