Monday, 25 March 2013

மனிதர்களை சிரிக்க வைப்பது கம்பியின் மேல் நடப்பதை விட கடினமானது


அனைத்து சிறுவர்களை போலவும் எனக்கும் சர்கஸ் கூடாரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. பிரமாண்டமான அரங்கு அமைத்து, வெளியே அவர்கள் நிகழ்த்தப்போகும் சாகசங்களின் கட் அவுட்களை வைத்து காட்சி இத்தனை மணிக்கு என அறிவிப்பு பலகையை மாட்டுவதுதான் தாமதம், அத்தனை நாளும் அதற்காகவே காத்திருந்ததை போல உடனே உள்ளே சென்று பின் வரிசையில் எனக்கு ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துக் கொள்வேன். அப்போதெல்லாம் பலகை இருக்கைதான். அதுவும் வட்ட வடிவில் நீளும் அந்த இருக்கைகள் அப்படியே அந்த அரங்கை முழு சுற்று சுற்றிவரும். பார்ப்பதற்கு ரோமானிய கோலோச்சியம் போல காட்சியளிக்கும். உள்ளே பறவைகள் கம்பியின் மீது சைக்கிள் ஓட்டும், ஒட்டகம் ஒரு முழு சுற்று சுற்றி வரும், யானைகள் டிரம்களை உருட்டுவதும், முன்னங்கால்களை உயர்த்தி பின்னங்கால்களை ஊன்றி நிற்பதுமாக வித்தை காட்டும். சிங்கம் நெருப்பு வளையத்துக்குள் புகுந்து வெளியே வரும். பெரும்பாலும் சிங்கத்தின் இந்த நெருப்பு வளைய வித்தை காட்சிகளின் முடிவிலேயே வைப்பார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட என்னை அதிகம் கவர்வது குள்ள கோமாளிகள்தான். விதவிதமான கலர் ஆடைகள், தலையில் முக்கோண வடிவ தொப்பி, மூக்கில் ஒரு பந்து, முகத்தில் சாயம் இவைதான் ஒரு சர்கஸ் கோமாளியின் அடையாளம். இவர்கள் அரங்கத்துக்குள் தோன்றினாலே அரங்கத்தில் சிரிப்பு வெடித்து வரும் எல்லோர் உதடுகளிலிருந்தும். நான் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிப்பேன். பின் வீட்டில் யாரும் இல்லாதபோது கண்ணாடியின் முன்னால் நின்றுக்கொண்டு கோமாளிபோல நடித்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் இவர்களின் வித்தைகள் கிராமிய தெருக்கூத்தின் பிரதான கதாப்பாத்திரமான கட்டியக்காரனை ஒத்திருக்கும்.ஆனால் அப்போதெல்லாம் அத்தகைய கோமாளிகளின் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும் என்றே நினைத்துவந்தேன். அவர்களுக்கென்று தனி ஒரு வாழ்வு உண்டு என நான் கற்பனை கூட செய்தது இல்லை. சர்கஸ் கூடாரம்தான் அவர்களின் வீடு, அங்குதான் அவர்களை காணமுடியும், அதனால் அவர்கள் அதற்குள்ளாகவே பிறந்து, அங்கேயே வாழ்ந்து மடிந்துவிடுவார்கள் என்றே நினைத்தேன். மனிதர்களை சிரிக்கை வைக்க கடவுள் அனுப்பியவர்கள் இந்த கோமாளிகள் என்று நினைத்தேன். பின் சற்றே உருவமும், வயதும் உயர்ந்த பிற்பாடு எப்படியாவது ஒரு கோமாளியை பிடித்து அவரிடம் பேசி பழக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் என் ஆசை நான் விகடனில் மாணவ பத்திரிகையாளனாக பணியாற்ற துவங்கும் வரை கைக்கூடவில்லை. 


ஒரு நாள் எதிர்ச்சையாக கோவை வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது அங்கே கிளை விரித்து அமர்ந்திருந்த சர்கஸ் கூடாரம் என் கண்ணில் பட்டது. நெருங்கி விசாரித்தேன். ஒரே ஒருவர் மட்டும்தான் தமிழர் என்றார்கள். அவரிடம் பேச துவங்கியவுடன்தான் நான் அதுநாள் வரையிலும் கோமாளியாக பார்த்த அந்த குள்ள மனிதர்களின் உணர்வுகளையும்,அவர்களது வாழ்க்கை மிகவும் துயரமானது எனவும் உணர்ந்தேன்.52 வயதான மோகன்தாசின் வார்த்தைகள் அப்படியே.....“ எங்க வீட்ல என்னோடு சேத்து மொத்தம் ஏழு பிள்ளைங்க. நான் ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப எங்க அப்பா ஒரு விபத்துல மாட்டி இறந்திட்டாரு. அதனால அம்மா ஒத்தையாவே எங்க எட்டு போரையும் வச்சு சமாளிச்சு பாத்தாங்க . ஆனா அவங்களால தனி மரமா நின்னு எல்லோரையும் கரை சேர்க்க முடியல. அதனால என்னையும் என் அண்ணன் ஒருவனையும் எங்கையாவது மடத்துல சேத்து விடலாம் னு நெனச்சிக்கிட்டு இருந்தப்ப தான் எங்க ஊருக்கு ‘ஒயிட் வே’ னு ஒரு சர்கஸ் கம்பெனி வந்துச்சு. சரி னு அதுல எங்க ரெண்டு பேத்தையும் சேத்து விட்டுட்டாங்க. நாளு வயசுல வேலைக்கு சேர்ந்த எனக்கு அந்த சர்கஸ் கூடாரம் ஒரு மாயயுலகம் போல இருந்துச்சு. ஆனா இதுவே என் வாழ்க்கை ஆகும் னு நான் நெனக்கல.      என்னோடு நாலு வயசிலிருந்து எட்டு வயசு வரைக்கும் நான் மேடைக்குள்ள வரல. இந்த நாலு வருஷமும் எனக்கு பலமான பயிற்ச்சி கொடுத்தாங்க. கம்பி மேல நடக்குறது , ஏணி ய காலால தாங்கி பிடிக்கிறது , கம்பில சைக்கிள் ஓட்டுறது னு நான் எல்லாத்தையுமே கத்துக்கிட்டேன். அப்புறம் என்ன எட்டு வயசுல மேடை ஏத்திட்டாங்க. முதல்ல ரொம்ப குதுகலமா இருந்துச்சு. நாம கம்பி மேல நடக்குறதும், நம்மல பாத்து எல்லோரும் கை தட்டுறதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எனக்குனு எந்த ஒரு ஆதரவும் இல்லாம தனியாள அந்த ஒத்த கம்பிய காலால பிடிச்சிக்கிட்டு நடக்கும் போதும் எல்லோரும் கை தட்டி உற்சாக படுத்தினத  பாக்குறப்போ நான் அநாதை இல்ல , எனக்கும் நிறைய பேர் இருக்காங்கனு தோணும். ஆனா அப்போலாம் எனக்கு சம்பளம் கிடையாது , மூனு வேளை சாப்பாடும் , தூங்க ஒரு இடமும் தான் எனக்கான வெகுமதி.
     


          என் வாழ்க்கையின் முதல் அடி ஒன்பது வயசுல வந்துச்சு. கீழ ஒருத்தர் படுத்துக்கிட்டு ஏணிய தன்னோட கால்ல நிறுத்தி வச்சிருப்பாரு நாங்க ஒருத்தர் மேல ஒருத்தரா ஏறி அதுல நிக்கணும் , ஆனா நான் அப்போ கிட்டதிட்ட முப்பது அடியிலிருந்து கீழே விழுந்துட்டேன். தலைல பலமா அடிப்பட்டு இரத்தம் கொட்டிருச்சு. மூனு நாள் மருத்துவ மனை வாசத்துக்கு அப்புறம் திரும்பவும் ஏணில ஏறத் துவங்கிட்டேன். ஆனா தலைல பலமா அடிப்பட்டதால எனக்கு ஞாபக மறதி அதிகமாகிடுச்சு. அப்போ பட்ட வலி இன்னைக்கு வரைக்கும் அப்பப்போ லேசா வலிச்சிக்கிட்டு தான் இருக்கு.

என்ன நாலு வயசுல இந்த சர்கஸ்ல சேத்துவிட்டதுக்கு அப்புறம் எங்க அம்மா என்ன பாக்கவே வரல , ரொம்ப நாள் கழிச்சு நானா தேடிக்கிட்டு போய் பாத்தப்போ ரெண்டு பேருமே கதறி கதறி அழுதுட்டோம். அதுக்கப்புறம் நான் வருஷத்துல பத்து நாள் அம்மாவ பாக்க போயிட்டு வந்துக்கிட்டு இருக்கேன் இப்போ வரைக்கும்.

என்னோட 15 வது வயசிலிருந்து நான் கோமாளி வேஷம் கட்ட ஆரம்பிச்சிட்டேன். ஆரம்பத்துல மக்களை சிரிக்க வக்கிறது கம்பி மேல நடக்குறத விட கஷ்டமா இருந்துச்சு , அப்போ தான் சார்லி சாப்ளின் எனக்கு கை கொடுத்தாரு. அவரோட படங்கள பாத்து தான் நான் எனக்கு னு ஒரு உடல் மொழியும் , முக பாவங்களையும் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் பெரிய ஆபத்து எதுவும் எனக்கு வந்ததில்ல. ஆனா இந்த சர்கஸ் கூடாரத்துக்குள்ள சில சமயங்கள்ல மரணம் கூட நிகழ்ந்திருக்கு. ஆனாலும் வேற பொழப்பு எதுவும் தெரியாம நாங்க இதுக்குள்ளே வாழறோம்.


        என்னோடு குடும்பம் இப்போ திருச்சில இருக்கு. கொஞ்ச வருஷம் முன்னாடி என்னோட மகள் பாத்தாம் வகுப்புல 319  மதிப்பெண் வாங்கிட்டு அது கம்மி நெனச்சிக்கிட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு இறந்துட்டா , அப்புறம் என்னோட மகனுக்கு ஒரு பையன் பொறந்து அடுத்த நாளே இறந்துட்டான். ஆனா இந்த ரெண்டு மரணத்துக்கும் என்னால போக முடியல . குறிப்பா என் பேரம் முகத்தக் கூட என்னால பாக்க முடியல. இப்போ வரைக்கும் அந்த நினைவுகள் என்ன வாட்டிகிட்டு இருக்கு. ஆனா இந்த விஷயங்கள என்கிட்ட சொன்னப்போ நான் மேடைல அழுதுக்கிட்டே கோமாளித்தனம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். மக்கள் ஆரவாரமா என்ன பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. அதான் எங்க வாழ்க்கை. எப்போ அரிதாரத்த பூச துவங்குரமோ அப்பவே எங்க நெஜ முகம் கரைஞ்சு போயிடுது. ஆனா எல்லா மனிதருக்குமே கவலை , துக்கம், அழுகை எல்லாம் இருக்கும்.எங்களால முடிஞ்ச அளவு நாங்க மேடை ஏறும் ஒரு மணி நேரம் அவங்க கவலைய மறந்து சிரிக்க வச்சா போதும் னு தான் நெனக்கிறோம்.

  ஆனா சர்கஸ் இப்போ முன்ன போல இல்ல, இப்ப காலம் மாறிட்டதால மக்கள் கிட்ட சர்கஸ் மேல இருந்த ஆர்வம் கொறஞ்சி போச்சு. அதனால பல கம்பெனிகளை இழுத்து மூடிட்டாங்க. எங்க கம்பெனி தான் இன்னும் நெலச்சு நிக்குது. இதுவும் மூடிட்டா இவங்க எல்லாம் எங்க போவாங்கனு தெரியல. ஏன்னா இங்க வேல செய்யிற பல பேரு அனாதைகள். காலம் தான் எங்களோட மிச்ச சொச்ச வாழ்க்கையையும் முடிவு பண்ணனும் “ என்றவர் அடுத்த காட்சிக்கான நேரம் தொடங்கிவிட்டதால் தலையில் தொப்பியை லேசாக மாட்டிக்கொண்டு நம்மிடமிருந்து விடைபெற்றார். அவர் உள் நுழைந்ததும் அரங்கம் அதிர்ந்து அடங்கியது.

மோகன்தாசிடம் பேச: 9159643836


நாவல் அறிமுகம்: நிலம் பூத்து மலர்ந்த நாள்

வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை...