Wednesday, 13 December 2017

தனி மனிதன் பாதுகாப்பானவன், கும்பல் மோசமானது – அடியாள் நூல் குறித்து! – ராம் முரளி2007-ஆம் வருடம் என நினைக்கின்றேன். எனது வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் பாரதி விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தன. ஆண்டுதோறும் பாரதி விளையாட்டரங்கத்தில் இப்படி சுதரந்திர தின விழாவும், குடியரசு தின விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்தான். எனது ஊரில் உள்ள மக்கள் மட்டுமில்லாமல், நெய்வேலியை சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக அங்கு வந்து அன்றைய தின விழாக்களில் பங்குகொள்வதை தமது தேசிய கடமையாக, தேசத்தின் மீதான தமது பற்றுறுதியை மெய்ப்பிக்கும் நிகழ்வாக கருதி வருகின்றனர். 

அன்றைய தினத்தில் நான் எனது நண்பர்களுடன் பாரதி விளையாட்டரங்கத்திற்கு சென்றிருந்தேன். பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருக்கும் அவ்விடத்தில் உடன் வந்தவர்களை மிக எளிதாக கூட்டத்தில் தவறு விடுவது வாடிக்கைதான். அதேப்போல, எதிர்பாராமல் வேறு பல நண்பர்களின் கரங்களை கூட்டத்தினூடாக பற்றிக்கொள்வதும் உண்டு. அப்படி அன்றைக்கு என்னுடன் வந்தவர்களில் இருந்து எதிர்பாராதவிதமாக விலகி, கோபால் என்ற நண்பனொருவனை கண்டடைந்திருந்தேன். 

அவன் அதற்கு முந்தைய சில வருடங்களில் எனக்கு நெருக்கமான நண்பனாக இருந்தவன். வீடு மாற்றத்திற்கு பிறகு ஓரிரு முறைதான் அவனை சந்தித்திருந்தேன். பார்த்ததும் வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, எனது கைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகவேகமாக ஒரு திசையில் நடக்கத் துவங்கினான். அவனது அவசரத்துடன் என்னால் ஈடுகொடுக்க முடியாததால், அவனை நிறுத்தி ஏன் இந்த அவசரம் என்று கேட்டேன். அதற்கு மிக ரகசியமான குரலில் எனது முகத்தருகே குனிந்து, விழிகள் விரிய, “வர்மா அண்ணன (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பாக்கப் போறோம்” என்று சொன்னான். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

வர்மா இந்த கூட்டத்தில் இருக்கிறாரா? அவர் சிறையில் அல்லவா இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன்? எனக்கு குழப்பமாக இருந்தது. அதனால் அவனிடமே கேட்டேன், “அவரு ஜெயில்ல இல்ல இருக்காரு? இங்க எப்படி?” கோபால் மீண்டும் அதே ரகசிய குரலில் சொன்னான், “அவரு பெயில்ல வந்திருக்காரு… அதோ அங்கத்தான் இருக்காரு… வா…” என்றான்.

தொடரந்து அவனுடன் செல்வதா அல்லது வேண்டாமா என பல குழப்பங்கள் எனக்குள் சூழ்ந்திருந்தன. மனதினுள் லேசாக பயம் உண்டாகியிருந்தது. வர்மா என்ற சொல்லை (அ) பெயரை நான் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும், நேரில் அவரை ஒருமுறை கூட அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இயல்பாகவே இவ்வாறாக தம்மை சுற்றிலுமுள்ள பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுவர்களிடம் நெருக்கம் உண்டாகிவிடும் அல்லது குறைந்தபட்சம் அவர்களின் பெயர்களையாவது அறிந்து வைத்திருப்பார்கள்.

வர்மா என்கிறவர் எங்கள் ஊரில் அன்றைய தினத்தில் மிகப்பிரபலமான தாதா. சாதியை மையமாக கொண்ட கட்சி ஒன்றில் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவர், பல குற்ற செயல்களில் பங்குகொண்டவர். அவர் குறித்தான கட்டுக்கதைகள் ஏராளமாக புழங்கி வந்தன. அவற்றில் எது நிஜம் எது புனையப்பட்டவை என்பதை அவரை தவிர எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை வாட்டர் டேங்க் எனும் பகுதியில், அவரது காரிலேயே வைத்து பட்டபகலில் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஒன்றின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்படியாக நான் அறிந்து வைத்திருந்த தாதா வர்மாவை பார்க்க கோபால் என்னை இழுத்துக்கொண்டு சென்றான்.
எனது உடலில் உஷ்ணம் ஏறியிருந்தது. நாங்கள் மெல்ல வர்மாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். கோபால் என்னை இழுத்துச் சென்று நிறுத்திய இடத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட மனிதர்கள் நின்றிருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் கட்சி கரை பதிக்கப்பட்ட வெள்ளுடை அணிந்திருந்தனர். பின்னால் ஒரு பெரிய அடியாள் பட்டாளமே நின்றுக்கொண்டிருந்தது. அதன் மையத்தில் சிவப்பு நிற டீ- ஷர்ட் ஒன்றை அணிந்தபடி, முன்னந்தலையில் வழுக்கை ஏறியிருக்க, தொந்தி பெருத்த வர்மா நின்றிருந்தார். மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்துடன் அவர் அங்கிருப்பதாக எனக்கு தோன்றியது. கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்துகின்ற மிக சாதாரணமான தாதாவாக நான் அறிந்து வைத்திருந்த வர்மாவை ஒரு அரசியல் அடியாளாக உணர்ந்த தருணம் அது!

கோபாலை பார்த்ததும், “வாப்பா தம்பி” என சிரித்த முகத்துடன் அவனை வரவேற்றார். கோபால் என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றான். கொலைக்காரன் ஒருவனின் இரத்தம் படிந்த கரங்களை முதல்முறையாக தொட்டு தழுவினேன்.

சட்டென்று நான் அங்கிருந்து சிறிது தூரம் விலகி நின்றுக்கொண்டேன். கோபால் அவரிடம் எவ்வித சங்கடங்களுமின்றி மிக சாவகாசமாக, சந்தோஷமாக பேசிவிட்டு வந்தான். அவ்விடத்திலிருந்து நகர்கையில் மீண்டுமொருமுறை பின்னால் திரும்பி அவரை பார்த்தேன். வேறொரு இளைஞன் அவருக்கு சலாம் போட்டு அவரிடம் கை குலுக்கிக் கொண்டிருந்தான். அவர் செய்த கொலைக்காக அவரை பாராட்டுவதைப் போலிருந்தது அக்காட்சி.

சக மனிதனொருவனின் உயிர் அறுத்த கொலைக்காரன் சகல மரியாதையுடன் தேசியத்தின் சுதந்திர தின விழா நிகழ்ந்துக்கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்ததும், பல இளைஞர்கள் இவ்வாறான குற்றமிழைப்போரிடம் நெருக்கமான உறவு பேண விழைவதும், அவர்களை முன் மாதிரிகளாக கொண்டு தடம் மாறிப் போவதும் பெருகி வருகிறதேயன்றி குறைந்தபாடில்லை.


விழுப்புரம் மாவட்டத்தில் சிலப்பல ஆண்டுகளுக்கு முன்னால், இதேப்போல பிரபல அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த ஜோதி நரசிம்மன், மனம் திருந்தி தனது அனுபவங்களை “அடியாள்” எனும் பெயரில் நூலாக எழுதியிருக்கிறார். வெட்டுக்குத்து சம்பவம் ஒன்றின் பழிவாங்கல் நடவடிக்கையாக இவரது கோஷ்டியினர் விழுப்புரம் மாவட்டத்தில் கட்டவிழ்த்துவிடும் தொடர் வன்முறை நிகழ்வுகளிலிருந்து தொடங்குகிறது இந்த புத்தகம்.

மிகப்பெரிய வன்முறை நிகழ்வொன்றில் பங்கெடுத்துக் கொண்டதற்கு பிறகு எவ்வாறு அவர்கள் தலைமறைவாகின்றனர், யாரெல்லாம் அவர்களுக்கு ரகசியமாக உதவுகிறார்கள், சரணடையும் சடங்கு எவ்வாறு நிகழ்கிறது, காவல் நிலைய விசாரிப்புகள், பின்னர் மத்திய சிறையில் கைதானவர்களை நடத்துகின்ற விதம், மத்திய சிறையின் அமைப்புமுறை என இதுவரையிலும் நாம் வெறும் செய்திகளாக மட்டுமே கடந்துப்போன விஷயங்களை ஜோதி நரசிம்மன் தனது நூலில் விலாவரியாகவும் மிகத் நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார். சிறைச்சாலைக்குள் நுழைந்து திரும்பும் அசலான உணர்வை அவரது எழுத்து வாசிக்கையில் நமக்கு கடத்துகிறது.

கடலூர் மத்திய சிறைச்சலையில் ஒவ்வொரு நாளையும் அவர் கழிக்கின்ற விதம், அவரது மனப் போராட்டங்கள், சகல சந்தோஷங்களுடனும் வெளியில் அலைந்து திரிந்துவிட்டு ஒரு இறுக்கமான சூழலுக்குள் சிக்குண்டு அல்லல்படுவது என புத்தகம் நெடுக சிறை வாழ்வின் ரணங்களை நாம் உணர முடிகிறது.

ஏதேனுமொரு குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை வருவோர் அனுபவிக்கும் தண்டனைகள் நியாயமானதுதான் என்றாலும், சிறையறையே சில ஆரம்ப நிலை குற்றவாளிகளை மிகக் கொடூரமான குற்றவாளிகளாக மாற்றிவிடுவதையும் ஜோதி நரசிம்மன் குறிப்பிடுகிறார். சந்தேக வழக்குகளில் கைதாகி முதல் முறையாக காவல் நிலையம் கொண்டு வரப்படும் சாதாரண மனிதனை குற்றவாளியாக மாற்றிவிடும் பண்பு காவலதிகாரிகளிடம் இருக்கவே செய்கின்றன.


ஜோதி நரசிம்மன் தனது புத்தகத்தில் குறிப்பிடும் மத்திய சிறையின் அமைப்புமுறை எனக்கு முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது. அங்கு கைதிகளை மூன்று அடுக்குகளாக பிரித்து அடைப்பார்களாம். முதலாவதாக அரசியல் கைதிகள். அடுத்ததாக உணர்சிவசப்பட்டு சிறுசிறு குற்றங்களில் ஈடுப்படுவோர், மூன்றாவதாக பாலியல் வன்கொடுமை, தொடர் கொலைகள் போன்ற மோசமான செயல்களை செய்கின்றவர்கள். இவர்களிடம் முதல் இரண்டு அடுக்கை சேர்ந்தவர்கள் எவ்வித உறவினை வைத்துக்கொள்ள மாட்டார்களாம்.

குற்றமும், அதன் பிறகான வாழ்க்கையுமாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு மீண்டு வந்த மனிதனொருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பொதுவாகவே, சிறை சென்று திரும்பியவர்களை இந்த சமூகம் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அத்தகைய பார்வையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும், சிறை செல்லும் அனைவரும் திட்டமிட்டு குற்றங்களில் ஈடுபடுவர்கள் இல்லை, சந்தர்ப்பமும் சூழலுமே சில குற்றங்களுக்கான காரணங்களாக இருக்கின்றன என்பதை ஜோதி நரசிம்மன் ஒரு கோரிக்கையாகவே இந்த புத்தகத்தின் மூலமாக முன் வைக்கின்றார். அதேப்போல, வன்முறை பாதையை கையில் எடுப்பதன் மூலமாக, ஒருவர் அடையும் கிளர்ச்சி என்பது மிக குறுகிய காலம் மட்டுமே நீடிக்கக்கூடியது. வாழ்க்கைக்கான பாதை அதுவல்ல என்பதையும் மிக அழுத்தமாக இந்த புத்தகம் பேசுகிறது.
ஜோதி நரசிம்மனின் ‘அடியாள்’ புத்தகத்தை படிக்க நேரும் ஒருவர் குற்ற உலகினை மிக நேரடியாக சந்திக்கவும், சிறைச்சாலையின் இருண்ட பக்கத்தை உணரவும், வன்முறை பாதையை கைவிட்டு வாழ்க்கையை சீராகவும், நிம்மதியாகவும் அமைத்துக்கொள்ள வேண்டுமென்ற அக்கறையையும் புரிந்துக்கொள்ள முடியும்.

மிக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ ஒன்று நினைவுக்கு வருகிறது. விஜி என்ற இளைஞனை பகல்பொழுதிலேயே நடு வீதியில் வைத்து சில இளைஞர்கள் வெட்டி கொலை செய்த காணொளி அது. காவல்துறையினர் விஜியை மிகப் பிரபலமான ரவுடி என்று சொல்கிறார்கள். பல வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும், வழக்கு ஒன்றின் விசாரனை முடித்து திரும்புகையில் தான் அவரை சிலர் கொலை செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அவரை கொலை செய்தவர்களும் 20 - 25 வயதுடைய இளைஞர்களே!
அடியாள் புத்தகம் எனக்கு இதுவரையிலும் அறிமுகமாகியிருக்கும் பல இளம் குற்றவாளிகளை நினைவுப்படுத்தியது. பாக்கியராஜ் அண்ணன், ‘காட்டு’ ராஜா, ரெட் பிரபு, பிரகாஷ், இராஜா மாணிக்கம், இராதா கிருஷ்ணன் என மிக நீண்ட பட்டியல் அது. இவர்களில் சிலருக்கு தற்போது மன மாற்றமேற்பட்டு சீரான வாழ்க்கை அமைந்திருக்க, சிலரை பற்றிய தகவலே இல்லாமல் இருக்கிறது! வர்மாவே கூட பலமான வெட்டுக்காயங்களுடன் புதுச்சேரியில் மருத்துவமனையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.

வாழ்க்கை பக்குவப்படாத நிலையில் இருக்கும் இளைஞர்கள் எளிதாக குற்ற செயல்களின்பால் ஈர்க்கப்படுகின்றார்கள். வறுமை என்பதுதான் வன்முறையை தேர்வாக இருக்கிறது என்பதை எல்லோரிடத்திலும் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை. பலருக்கும், ஒரு தாதாவாக, ரவுடியாக, அடியாளாக இருப்பதன் மூலமாக கிடைக்கின்ற மரியாதையும், மக்களிடத்தில் அவர்களின் மீது உண்டாகின்ற அச்சமும், பெரிதாக உடலுழைப்பை செலவிடாமல் கையில் புரளும் பெரும் பணமுமே வன்முறை பாதைக்கான பிரதான தேர்வாக இருக்கின்றன. அரசியல் கட்சிகள் இவர்களை தங்களது அடிபொடிகளாக பயன்படுத்திக்கொண்டு, பின்னர் தேவையில்லாதபோது கழற்றி எறிந்துவிடுகின்றனர்.

அதேப்போல, காவல்துறையினரும் கைதிகளாக சிறைக்குள் நுழைகின்றவர்களை அதிக கவனத்துடனும், அவர்களின் மன மாற்றத்திற்கு வழிகோலும் வகையிலும் தமது நடவடிக்கைகளை பிரயோகிக்க வேண்டுமே தவிர, மேலும் மேலும் அவர்கள் குற்றம் செய்வதற்கான பயிலரங்காக, பயிற்சிக் கூடமாக சிறைச்சாலை செயல்படக்கூடாது!

வர்மா போன்ற வன்முறையின் மீது பெருமிதம் கொள்கின்ற மனிதர்கள் பிறிதொரு நாளில் தாமும் அதேப்போல வேறொரு மனிதரால் கொலை செய்யப்படலாம் அல்லது வெட்டுப்பட்டு உடல் உறுப்புகள் சிதைக்கப்படலாம் என்பதை உணர்ந்து, நேர்மையாக வாழ்வதன் அவசியத்தையும், மன நிம்மதியையும் உணர வேண்டும் என்பதை மிக அழுத்தமாக உரக்க சொல்கிறது ‘அடியாள்’ புத்தகம்!


நன்றி: தினமணி.COM

Tuesday, 17 October 2017

திரைப்படம் இயக்குவதைவிட கதை எழுதுவது கடினமான பணி! - மெல்வில் தமிழில்: ராம் முரளி1961ல் வெனிஸ் திரைப்பட விழாவில் மெல்வில்லிடம் எடுக்கப்பட்ட ரேடியோ நேர்காணல்: 

உங்களது எழுத்து முறையைப் பற்றி சொல்லுங்கள்.
எழுதுவது முற்றிலும் கடினமான பணியாகவே இருக்கிறது. எதுவொன்றையும் மற்றவர்களிடம் விளக்கிச் சொல்லுவதைவிட திரைப்படமாக எடுத்துவிடுவது மிகவும் எளிதானது என்பதே எனது கருத்து. ஆனால், ஒரு கதை எழுதுவது மிகுந்த சிரமத்திற்குரிய பணி. ஹெம்மிங்வே போலவோ ஃபால்க்னர் போலவோ எழுதுவது சாத்தியமில்லாதது.

பலர் உங்களது திரைப்படங்களை பற்றி சொல்லும்போது, அறை ஒன்றில் தனிமையில் பேனா பேப்பருடன் அமர்ந்துக்கொண்டு எழுதுவது பெரிய விஷயம் அல்ல. ஸ்டுடியோவில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வைத்துக்கொண்டு படம் இயக்குவதுதான் கடினமானது என்று குறைச் சொல்கிறார்களே?
இல்லை. நிச்சயமாக இல்லை. எழுதுவது மிக மிக கடினமான பணி.

சுய அடக்கத்தின் காரணமாக இவ்வாறு சொல்கிறீர்களா?
ஆமாம். அதோடு சில வருடங்களுக்கு பிறகு, முந்தைய வருடங்களில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று எடுத்துப் பார்த்தால் அது மிகவும் சராசரியாக இருந்திருக்கிறது என்பதை உணர்ந்துக்கொள்ள முடியும்.

எழுத்தைப்போலவே திரைப்படங்கள் இயக்கும்போதும் அது நிகழும் அல்லவா?
நிச்சயமாக.

நீங்கள் திரைப்பட உருவாக்கத்தில் நிகழும் தவறுகளைவிட எழுதும்போது ஏற்படும் தவறுகளை அபாயகரமானவை என நினைக்கிறீர்களா? நாம் திரையில் பார்க்க விரும்பாத ஒரு தவறு எளிதாக நமது கட்டுப்பாட்டையும் மீறி திரைப்பட உருவாக்கத்தில் நிகழ்ந்துவிட சாத்தியம் இருக்கிறதா? ஆனாலும், எழுதும்போது எதை வேண்டுமானலும் மாற்றிக்கொள்ளலாம் இல்லையா? அதனால் எனக்கு எழுதும்போதே நிகழும் தவறுகளை சரி செய்துக்கொள்வது எளிதானதாக தோன்றுகிறது.
எழுத்தைவிட திரைப்படத்தில்தான் நம்மால் முழுமையான வடிவத்தை எளிதாக உணர்ந்துக்கொள்ள முடியும். நமது தவறுகளை உணர்ந்துக்கொள்ள முடியும்.

ஆனால் ஏன் இவ்வாறு நிகழ்கிறது. மக்கள் ஒவ்வொரு துறைக்கும் புரிகின்ற எதிர்வினை வேறுபடுகிறது என்று நினைக்கிறீர்களா? திரைப்படத்தைவிட எழுத்தை மக்கள் அதிக முக்கியத்துவத்துடன் விமர்சனரீதியாக அணுகுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
நான் இரண்டு விஷயங்களை முயற்சித்திருக்கிறேன். எழுதுவதும், திரைப்படங்களை இயக்குவதும். என்னளவில் திரைப்படங்களை இயக்குவது எளிதானது.

நீங்கள் இதனை சுய அனுபவத்தின் வாயிலாகத்தான் சொல்கிறீர்களா?
ஆம். மிக உறுதியாக.

உங்களது பதிலில் இருந்து நீங்கள் திரைப்படம் இயக்குவது மிக எளிதானது என்பதால்தான் அதனை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிதானே?
நான் சில விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகின்றேன். அதனால் திரைப்படங்களை இயக்குகின்றேன். ஆம். எனது இளம் வயதில் நான் பலமுறை எழுத முயற்சித்திருக்கிறேன். ஆனால், அது மிக கடினமானது.  
(அக்டோபர் மாத அம்ருதா இதழில் வெளியானது) 

மெல்வில் எனது கடவுள் - ஜான் வூ தமிழில்: ராம் முரளிமெல்வில்லின் திரைப்படங்களில், என்னுடைய திரைப்படங்களை போலவே, மைய கதாப்பாத்திரங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் அலைக்கழிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் மிக மோசமான மாஃபியா கும்பலை சேர்ந்தவர்கள் மிகப் பெரும் கருணையோடு செயல்படுகிறார்கள். 


லெ சாமுராய் தான் நான் பார்த்த முதல் மெல்வில்லின் திரைப்படம். எழுபதுகளின் முந்தைய ஆண்டுகளில் அப்படம் ஹாங்காங்கில் வெளியாகியிருந்தது. அத்திரைப்படம் உடனடியாக ஆலைன் டெலானை (Alain Delon) ஆசியாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாற்றிவிட்டது. ஆலைன் டெலானின் முந்தைய திரைப்படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றாலும் லெ சாமுராயின் வீச்சு பரந்த அளவிலான ரசிகர்களை அவருக்கு தேடித் தந்தது. 

அதோடு, அத்திரைப்படம் அக்காலக்கட்ட திரைப்பட பார்வையாளர்களை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்கியது. அந்த படத்திற்கு முன்பாக இளைய தலைமுறையை சேர்ந்த பார்வையாளர்கள் கிளிப் ரிச்சர்ட், எல்விஸ் பிரஸ்லே ஆகியோர் நடித்திருந்த திரைப்படங்களையும் சண்டை காட்சிகள் மிகுந்த திரைப்படங்களையும் பார்த்து களிப்புற்றிருந்தார்கள். வாழ்க்கை மிகவும் எளிமையானதாக இருந்தது. ஆனால், லெ சாமுராய் வெளியானதும் அப்படம் இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அவர்களின் வாழ்க்கை முறையினையே வெகுவாக மாற்றிவிட்டிருந்தது. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஹிப்பி வைத்துக்கொண்டு, நீண்ட மயிற்கற்றையை முதுகில் தொங்கவிட்டிருப்பேன். ஆனால், இப்படத்தை பார்த்ததும், டெலானை போலவே தலைமுடியை வெட்டிக்கொண்டு, வெள்ளை சட்டையும், டையும் அணியத் துவங்கிவிட்டேன். 

லெ சாமுராய்தான் மெல்வில்லை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது. இந்த படத்தைப் பார்த்ததும் முதலில் அது எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மெல்வில்லின் தொழிற்நுட்பமும், அவரது மிக நிதானமான கதைச் சொல்லும் முறையும் முற்றிலும் புதியதாக இருந்தன. மிகச்சிறந்த பண்புகளை கொண்ட ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட குற்றவியல் திரைப்படத்தை பார்ப்பதுப்போன்ற உணர்வைதான் அத்திரைப்படம் எனக்களித்தது. ஹாங் காங்கில் நான் அப்போது திரைத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். சாங் செஹ் உடன் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தாலும், அந்நாட்களில் நான் சில பரீட்சார்த்த திரைப்படங்களையும் தன்னிச்சையாக இயக்கிக்கொண்டிருந்தேன். பிரெஞ்சு திரைப்படங்கள் அப்போதே எங்களது திரைப்படங்களின் மீது ஆளுமையை செலுத்த துவங்கியிருந்தது. குறிப்பாக, அதன் புதிய அலை இயக்குனர்களான த்ரூபா, கோடார்ட், சாப்ரோல், டெமி போன்றரது திரைப்படங்கள். 

ஆனால் அதன் பிறகுதான் மெல்வில் வந்தார்.

எனக்கும் மெல்வில்லுக்கும் பொதுவாக இருந்தது, அமெரிக்க குற்ற உலகை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பழைய திரைப்படங்களின் மீது எங்கள் இருவருக்குமே பெரும் காதல் இருந்ததுதான். மெல்வில் குற்றவியல் திரைப்படங்களைதான் இயக்கினார் என்றாலும், அவரது திரைப்படங்கள் அறிவுப்பூர்வமாக அவ்வகை திரைப்படங்களை அணுகியிருந்தது. மெல்வில் அவற்றை மிகவும் வன்முறை நிரம்பியதாக இயக்கியிருப்பினும் நமது உணர்வுகளோடு மிக எளிதாக ஒருவித பின்னலை அவர் ஏற்படுத்திவிடுகிறார்கள். கதை சொல்லும்போது மிகமிக சுய கட்டுப்பாட்டை மெல்வில் கடைப்பிடிக்கிறார். அதுதான் என்னை அவரை நோக்கி உந்தித் தள்ளியது. எனது திரைப்படங்களில் நான் ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்த ஏராளமான ஷாட்டுகளை மாற்றிமாற்றி உபயோகித்தபடியே இருப்பேன். மிக நெருக்கமான அண்மைக் காட்சிகளையும், ஷாட்களை அவ்வப்போது முன்னும்பின்னுமாக நகர்த்தியும் அக்காட்சிகளை படம் பிடிப்பேன். ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறாக, மெல்வில் கேரமாவை நிலையான கோணத்தில் வைத்தே படம் பிடிக்கிறார். இதன் வழியாக நடிகர்கள் தாங்களாகவே தங்களது உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்த வைக்கிறார். பார்வையாளர்களுக்கு காட்சியில் என்ன நிகழ்கிறது என்பது இதன்மூலம் முழுவதுமாக உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அதனால், அவரது திரைப்படங்கள் உளவியல்ரீதியாகவும் அறிவுப்பூர்வமாக பார்வையாளர்களிடம் உறவுக்கொள்கிறது.
மெல்வில் எப்படி தனது கலாச்சாரத்தோடு கீழைதேச தத்துவங்களை இணைக்கிறார் என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. அதனால்தான் அவரது திரைப்படங்களுக்கு ஹாங் காங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தமது திரைப்படங்களின் துவக்கத்தில் கீழைதேச பழமொழிகளை மெல்வில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். சீன தேசத்து தத்துவத்தை அந்த நாட்டின் குடிமக்களை விடவும் மெல்வில் அறிந்து வைத்திருக்கிறார். என்னால் அவரது திரைப்படங்களின் மீது ஒன்றி பயணிக்க முடிகிறது என்றால் அதற்கான காரணம், மனிதர்களின் மீது அவர் கொண்டுள்ள கரிசனம் நமது கீழைதேச மரபிலிருந்து உருவானது என்றே கருதுகிறேன். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிழல் உலக மனிதர்கள் எப்போதும் தங்களுக்கேயான பிரத்யேக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே நடப்பார்கள் என்றாலும், தங்களது மரபை விட்டுக்கொடுக்காது அதன் மீது பெருமையுடனே இருப்பார்கள். அதன் சுய அடையாளங்களை எப்போதும் போற்றவே செய்வார்கள். மெல்வில்லின் திரைப்படங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் மிக மெலிதாக பயணித்தபடியே இருக்கும். அவரது கதாப்பாத்திரங்கள் புதிரானவர்களாகவே இருப்பார்கள். அவரது செயல்கள் ஒருபோதும் யூகிக்கக்கூடியதாக இருக்காது. நம்மால் ஒருபோதும் அவர்களது அடுத்தடுத்த செயல்களை கணித்துவிட முடியாது. ஆனால் அவர்களது செயல்கள் எப்போதுமே வாழ்க்கையை விட மிகப்பெரியதாக இருக்கும். உங்களால் எந்தவொரு கோட்பாடுகளையோ, ஒழுக்க நியாயங்களையோ கொண்டு அவரின் கதாப்பாத்திரங்களை அணுகி விளக்கிவிட முடியாது. 

டெலான் லெ சாமுராய் திரைப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரம் சீன செவ்வியல் கதை ஒன்றின் நாயகனை எனக்கு நினைவூட்டியது. அவன் மிகப் பிரபலமான கொலைக்காரன். இறுக்கமும், துளி கருணையும் அற்ற அவன் தனது நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்காகவும்கூட எதை வேண்டுமானாலும் செய்து முடிக்கும் குணம் கொண்டவன். அரசன் ஒருவனை கொலை செய்யும் வேலை அவனிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால், தனது நண்பன் ஒருவனை காப்பற்ற முயலும் அவன், அரசனை கொல்லும் திட்டத்தில் தோல்வியுற்று இறுதியில் கொலையுண்டு சாகிறான். கிட்டதட்ட லெ சாமுராய் கதாப்பாத்திரமும் இதே வகையில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. 

நான் ஐம்பது மற்றும் அறுபதுகளில் இருத்தலியல் கோட்பாடுகளால் கவரப்பட்டிருந்தேன். என்னுடைய அவதானிப்பின்படி மெல்வில்லும் ஒரு இருத்தியல்வாதிதான். அவரது கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் தனிமையில் பீடிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எவர் ஒருவரும் அவர்களுக்காக காத்திருக்கவில்லை. உண்மையில் யாரும் அவர்களை அறிந்துவைத்திருக்கவில்லை. அவர்கள் முற்றிலும் தனியர்களாக, துயரார்ந்த சம்பவங்களினால் பாதிப்பிற்குள்ளானவர்களாக, தங்களது உள்ளார்ந்த தேடுதலில் தொலைந்துப்போனவர்களாகவுமே இருக்கிறார்கள்.
கிரேக்க துன்பியல் நாடகங்களும் அவரது திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்திய மற்றொரு மிக முக்கியமான கூறு. எனது திரைப்படங்களிலும் கிரேக்க துன்பியல் நாடகங்களின் வலுவான தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. மெல்வில்லின் கதாப்பாத்திரங்களைப்போலவே எனது கதாப்பாத்திரங்களும் எப்போதும் துயரார்ந்த தனித்து இயங்கும் மனிதர்களாகவே இருப்பார்கள். கிட்டதட்ட யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்ட மனிதர்களாகவும், இறுதியில் மரணத்தை தழுவுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், அவரது கதாப்பாத்திரங்களின் இறுதி முடிவுகளை பார்க்கிறபோது, அவர் ஒரு பெசிமிஸ்ட்டாக (ஒவ்வொன்றிலும் துயரத்தை மட்டுமே காண்பவர்கள்) இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுக்கிறேன். அவரது கதாப்பாத்திரங்கள் நிதானமாகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதைப்போல தோன்றினாலும், அவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய மற்றவர்களின் நலன் மீது அக்கறைக் கொள்பவர்களாகவுமே இருக்கிறார்கள். 

நட்பை பற்றிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், நாம் ஒருவரின் மீது மிக அதிகமாக அன்பு கொண்டிருந்தாலும், அவர் அதனை உணர்ந்துக்கொள்ளும் வகையில் நடந்துக்கொள்ளாததுதான். உங்களால் அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவற்றை அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லாமலேயே செய்து முடிப்பது. ஒருவேளை நாம் தனிமையில் எவரும் அறியாமலேயே இறந்துவிட்டாலும், நாம் விரும்புகின்ற மனிதருக்கு நம்மால் முடிந்ததை செய்துவிட்டால்போதும். இப்படித்தான் மெல்வில்லின் கதாப்பாத்திரங்கள் நடந்துக்கொள்கிறார்கள். மெல்வில்லும் இதுப்போல மற்றவர்களின் மீது கருணைக் கொண்ட மனிதரென்றே நம்புகின்றேன். 

தொழிற்நுட்பரீதியாக அவரது திரைப்படங்களில், மெல்வில் ஒரு செயலை நிகழ்த்துவதற்கு முன்பாக கட்டமைக்கின்ற பதற்றத்தை நான் விரும்புகின்றேன். லெ சாமுராயில் பாலத்தில் நிகழும் காட்சியை நினைத்துக்கொள்கிறேன். டெலான் தனக்கு பணம் தர வேண்டிய மனிதர் ஒருவரை அந்த பாலத்தில் சந்திக்கிறான். ஆனால், இது முழுவதும் திட்டமிடப்பட்ட சூழ்ச்சி என்பதை அவன் அறியாமல் இருக்கிறான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்துச் செல்கிறார்கள் விஷேஷமாக எதுவொன்றும் நிகழவில்லை என்றாலும், நமக்கு ஒருவித பதைபதைப்பை இக்காட்சி உருவாக்கிவிடுகிறது. உடனடியாக, மெல்வில் வைட் ஷாட் ஒன்றை காண்பிக்கிறார். நமக்கு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. மீண்டும் டெலானை அண்மைக் காட்சியில் காண்பிக்க அவனுக்கு குண்டடிப்பட்டிருக்கிறது. இவ்வகையிலான திரைப்படங்கள் பொதுவாக, வேறுவிதமான முடிவு அமைக்கப்பட்டிருக்கும். இறுதிக் காட்சியில் பெரும் துப்பாக்கி சண்டை நிகழ்ந்துக்கொண்டிருக்கும். ஆனால், மெல்வில் அக்காட்சியினை மிக அடக்கமாக, கவித்துவமாக உருவாக்கி இருப்பார்.

நான் பலமுறை மெல்வில்லை எனது திரைப்படங்களில் பின்பற்ற முயன்றிருக்கிறேன். எனது முதல் திரைப்படத்திலேயே அத்தைகைய முயற்சியில் நான் ஈடுபட்டேன். மெல்வில் தனது கதாப்பாத்திரங்களுக்கு கொடுக்கும் மயக்கும் இருண்மையான தன்மையை எனது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கும் கொடுக்க முனைந்தேன். எனது முதல் திரைப்படத்திற்கு பின்பும், மெல்வில்லின் சாயலில் நிறைய படங்களை எடுக்கும் விருப்பம் எனக்கு இருந்தது. ஆனால், ஸ்டூடியோக்கள் என்னை தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களை இயக்கவே அணுகினார்கள்.
1986ல் A better tomorrow திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், நான் முழுமையாக மெல்வில்லின் பாணியில் படம் இயக்க முடிந்தது. அந்த படத்தின் கதை நிகழ்கால நகர்புற வாழ்க்கையை பிண்ணனியாக கொண்டிருந்த த்ரில்லர் வகையை சேர்ந்தது. அதனால், மெல்வில்லின் பாணியில் செயல்படுவது எளிதாக இருந்தது. லெ சாமுராயின் டெலான் சாயலிலேயே எனது திரைப்பட கதாப்பாத்திரத்தினை உருவாக்கினேன். அவனது தோற்றம், அவன் பேசும் விதம், அவனது பார்வை என அனைத்தையுமே லெ சாமுராயின் டெலான் தோற்றத்திலேயே உருவாக்கினேன். ஹாங் காங்கில் மக்கள் ரெயின் கோட் அணிந்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது. அதனால் எனது படத்தின் நாயகன் ரெயின் கோட் அணிந்துக்கொண்டிருந்தது முற்றிலும் புதியதாக இருந்தது. மெல்வில்லின் தாக்கம் இப்படத்தில் முழுவதுமாக நிறைந்திருந்தது.

A better tomorrowல் ஒரு நீண்ட காட்சி இருக்கும். அதன் நாயகன் உணவு விடுதி ஒன்றிற்குள் தனது முதல் கொலையை நிகழ்த்த நுழைவான். உள்ளே செல்லும்போது தனது துப்பாக்கியை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிடுவான். பின், ஓர் அறைக்குள் நுழைந்து தான் தேடி வந்தவனை கொலை செய்துவிடுவான். பிறகு அவ்விடத்திலிருந்து, முன்பு மறைத்து வைத்த துப்பாக்கியின் துணையுடனேயே வெளியேறுவான். இக்காட்சி முற்றிலும் லெ சாமுராயில் டெலான் கொல்லப்படுவதற்கு முந்தைய காட்சியின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டதே. அக்காட்சியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றினுள் நுழையும் டெலான் அங்கிருக்கும் பாடகரை கொல்ல குண்டுகள் இல்லாத துப்பாக்கி ஒன்றை எடுத்துச் செல்வான். இக்காட்சியின் பாதிப்பிலிருந்தே நான் எனது திரைப்படத்திற்கான காட்சியை உருவாக்கினேன்.

மெல்வின் பாணியிலேயே நான் உருவாக்கிய திரைப்படங்கள், The Killer, Hard Boiled மற்றும் Bullet in the head. இதில் The Killerதான் கிட்டதட்ட மெல்வின் சாயலிலேயே உருவாக்கியிருந்த திரைப்படம். இப்படத்தின் துவக்க காட்சியில் லெ சாமுராய் திரைப்படத்திலிருந்து ஒரு பகுதியையே நான் பயன்படுத்தியிருக்கிறேன். 1988-89களில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இப்படத்தை நான் மெல்வில்லிக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று சொன்னபோது, மிகப்பெரிய அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது. அங்கிருந்தவர்களில் எவருமே மெல்வில்லின் பெயரையோ அல்லது லெ சாமுராய் திரைப்படத்தையோ கேள்விப்பட்டிருக்கவில்லை. இளைய தலைமுறையினர் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்திதான்.

இப்போது மெல்வில் மிகவும் பரவலாக அறியப்பட்டிருக்கிறார். ஒருவேளை நானும் க்விண்டின் டெரண்டினோ போன்றவர்களும் அவ்வப்போது அவரை பற்றி பேசுவதாலும் இருக்கலாம். நான் பங்கேற்கும் அனைத்து திரைப்பட விழாக்களிலும் மெல்வில்லின் பெயரை குறிப்பிடாமல் இருக்க மாட்டேன். ஒருவேளை இதன் மூலமாக அவர் இன்றைக்கு பரவலாக அறியப்பட்டிருக்கலாம். நான் The Killer திரைப்படத்துடன் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது, பல அமெரிக்க திரைப்பட ரசிகர்களும் மெல்வில்லை பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தார்கள். மெல்வில்லின் திரைப்படங்களை பார்க்கும் எந்தவொரு பார்வையாளர்களும் மற்றைய அமெரிக்க திரைப்பட இயக்குனர்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுப்பட்டவர் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அவரது திரைப்பட கலை ஒருவிதமான தெய்வாதீன தன்மைகளை கொண்டிருக்கிறது. 

(அக்டோபர் மாத அம்ருதா இதழில் வெளியானது)

தனி மனிதன் பாதுகாப்பானவன், கும்பல் மோசமானது – அடியாள் நூல் குறித்து! – ராம் முரளி

2007-ஆம் வருடம் என நினைக்கின்றேன். எனது வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் பாரதி விளையாட்டரங்கத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் வெகு வி...